வங்கதேச பள்ளியில் நடந்த இசை நிகழ்ச்சியில் வன்முறை
வங்கதேச பள்ளியில் நடந்த இசை நிகழ்ச்சியில் வன்முறைpt web

வங்கதேச பள்ளி விழாவில் வன்முறை: இசை நிகழ்ச்சி ரத்து.. 25 மாணவர்கள் காயம்

வங்கதேச பள்ளி ஒன்றில் நேற்றிரவு நடைபெற்ற கலை விழாவில் வெளிநபர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
Published on
Summary

வங்கதேச பள்ளி கலை விழாவில் வெளிநபர்கள் நடத்திய தாக்குதலில் 20 பேர் காயமடைந்தனர். ஜேம்ஸ் இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், கும்பல் ஒன்று கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டது. பாதுகாப்பு பணியாளர்கள் தடுக்க முயன்றபோது, பதற்றம் அதிகரித்து, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகம் களத்தில் இறங்கி, ஜேம்ஸ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.

வங்கதேச பள்ளி ஒன்றில் நேற்றிரவு நடைபெற்ற கலை விழாவில் வெளிநபர்கள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

வங்கதேசத்தின் மிகப்பெரிய ராக் இசைக் கலைஞர் ஜேம்ஸ். இவர் நகர் பால் (Nagar Baul) என்ற இசைக்குழுவின் முன்னணி பாடகராக இருக்கிறார். இவர் ஃபாரித்பூர் ஜில்லா பள்ளியின் 185-ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவரது இசை நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது.

முன்னதாக, பள்ளியின் ஆண்டுவிழா இரண்டு நாள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. வியாழன் காலை தொடங்கிய நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஜேம்ஸின் இசை நிகழ்ச்சியோடு முடிவடைய இருந்தது.

இத்தகைய சூழலில், ஜேம்ஸின் இசை நிகழ்ச்சியில்தான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முக்கியமாக நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஜேம்ஸ் நடத்தும் நிகழ்ச்சி என செய்திகள் வெளியான நிலையில் பள்ளிகளுக்கு வெளியே அதிகமான கூட்டம் கூடியது. இசை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள முஜிப் சாலையில் திரண்டனர். இதனையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியில் குழுமி இருப்பவர்களும் பார்ப்பதற்கு ஏதுவாக திரைகளை ஏற்பாடு செய்தனர். ஆனாலும், பதற்றம் அதிகரித்தபடியே இருந்தது.

இதற்கிடையே இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், நிகழ்ச்சிக்குள் அனுமதிக்கப்படாத வெளிநபர்கள் சிலர் பள்ளிகளின் சுற்றுச் சுவர்களின் மீதேறி உள் நுழைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பாதுகாவலர்களும் அவர்களைத் தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் கொண்ட அந்த கும்பல் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. முடிவில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களும் அதிகாரிகளும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். அதாவது, இரவு 9.30 மணியளவில் ஜேம்ஸ் மேடைக்கு செல்ல வேண்டுமென திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில நிமிடங்களுக்கு முன் வெளிநபர்கள் சிலர் கும்பலாக கூட்டத்திற்குள் புகுந்தனர். அவர்களை பாதுகாப்புப் பணியாளர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தடுக்க முயன்றபோது, வெளிநபர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். செங்கல் மற்றும் கற்களை மேடையை நோக்கியும் கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கியும் அவர்கள் வீசிய நிலையில், கூட்டம் பரபரப்படைந்தது. வெளிநபர்கள் நடத்திய தாக்குதலில் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களே அதிகமாகக் காயமடைந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மேடைக்கு முன்பு அமர்ந்திருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டம் ஒழுங்கு பிரச்னையின் காரணமாக மாவட்ட நிர்வாகம் களத்தில் இறங்கியது. இரவு 10 மணியளவில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே ஜேம்ஸ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அவருக்கும் அவரது குழு உறுப்பினர்களுக்கும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்தான எவ்விதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ராஜிபுல் ஹாசன் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார். தாக்குதல் நடத்தியது யார் என்றும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தற்போது வரைத் தெரியவில்லை எனத் தெரிவித்தார். மேற்கொண்டு வன்முறை அதிகரிக்காமல் இருக்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று தெரிவித்தார். மேலும் அக்கும்பல் நடத்திய தாக்குதலில் 15 முதல் 25 மாணவர்கள் காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com