வியட்நாம் கொரோனாவை வீழ்த்தியது எப்படி? 

வியட்நாம் கொரோனாவை வீழ்த்தியது எப்படி? 

வியட்நாம் கொரோனாவை வீழ்த்தியது எப்படி? 
Published on
கொரோனா பரவலைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே திணறி வரும் நிலையில், வியட்நாம் வெற்றிகரமாக வைரஸை கட்டுப்படுத்தியுள்ளது. 
 
முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவிய சீனாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள நாடு  என்றால் அது வியட்நாம்தான். 9.7 கோடி மக்கள் தொகை கொண்ட வியட்நாமில் கொரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 270தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் எந்த உயிரையும் பறிக்க முடியவில்லை. வியட்நாம் அரசின் துரித நடவடிக்கைகளும் மக்களின் ஒத்துழைப்புமே இதனைச் சாத்தியப்படுத்தியுள்ளது. 
 
 
சீனாவில் கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்ததை அறிந்த உடனே சீனா உடனான எல்லையை மூடியது வியட்நாம் அரசு. நாட்டில் அனைத்து வகையான போக்குவரத்தையும் முடக்கியது. தனி மனித இடைவெளியைக் கட்டாயப்படுத்தியது. பொது முடக்கத்தை மிகக் கடுமையாக அமல்படுத்தியது. இது தவிர கொரோனா வைரஸ் குறித்துப் பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களுக்குப் புரிய வைத்தது. பொது முடக்கத்தை மீறுவோருக்கு அபராதம் விதித்தது. வேலையிழந்த தொழிலாளர்களுக்கு ஏடிஎம்களை ஏற்படுத்தி இலவசமாக அரிசி வழங்கியது. 
 
 
ஜனவரி மாதம் முதல் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனே பரிசோதனைகளைத் துரிதப்படுத்தியது. உள்நாட்டிலேயே மருத்துவப் பரிசோதனை கருவிகளை உருவாக்கியது வியட்நாம். இவை துரிதமாக கொரோனா தொற்றைக் கண்டறிய உதவியதாகச் சொல்லப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் விமான நிலையங்களிலேயே முழு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் உடனே கண்டறியப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டனர். 
 
 
இப்படி அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஏற்கெனவே சார்ஸ் வைரஸை எதிர்கொண்ட அனுபவமும் வியட்நாமுக்கு கை கொடுத்துள்ளது. அது தவிர இங்குள்ள ஒற்றை கட்சி ஆட்சி முறையும் காரணமாகக் கூறுகின்றனர் வல்லுநர்கள். அண்மைக் காலமாகப் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாததால் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது வியட்நாம். அரசின் துரித நடவடிக்கையும் மக்களின் ஒத்துழைப்பும் தெற்காசியாவிலேயே கொரோனாவை வென்ற நாடாக வியட்நாமை மாற்றியுள்ளது. தற்போது கொரோனா தடுப்புப் பணியில் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாகியுள்ளது, வியட்நாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com