மிக அழகாகச் சண்டையிடும் பாசக்கார குட்டிக் கரடிகள் - 20லட்சம் பேர் ரசித்த வீடியோ
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் தேசியப் பூங்காவில் கரடி குட்டிகள் இரண்டு ஆனந்தமாகச் சண்டையிட்டுக்கொள்ளும் க்யூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் இருக்கிறது. இந்தப் பொது முடக்கக் காலத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விலங்குகளின் சேட்டை மிகுந்த வீடியோக்கள் மக்களை பெரும்பாலும் மகிழ்வித்து வருகின்றன. எப்போதும் நகர வாழ்க்கையின் பிசியாக இருக்கும் பலரும் இந்தக் கொரோனா காலத்தில் விலங்குகளின் குறும்புச் சேட்டைகளை ரசிக்கத் தொடங்கியுள்ளனர். பலருக்கும் இதுபோன்ற வீடியோக்கள் பெரும் ஆறுதலையும் சந்தோஷத்தையும் தந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.
இப்படிதான் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பிக் பெண்டு தேசியப் பூங்காவில் வீடியோ ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. 41 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், இரண்டு கரடிக் குட்டிகள் முட்டி மோதி, எழுந்து புரண்டு மல்யுத்தம் போன்ற விளையாட்டில் ஈடுபடுகிறது. இதைச் சற்றும் கண்டு கொள்ளாமல் ஒரு பெரிய கரடி ஓரத்தில் நின்றிருக்கிறது. கடைசியாக வீடியோ முடியும்போது, நான்காவதாக ஒரு கரடி இருப்பது தெரிகிறது. அது ஒரு சின்னக் கரடிக் குட்டி. இந்த இரு கரடிகளின் சண்டையைப் பார்த்து அரண்டு போய் அது ஒரு ஓரமாகப் பதுங்கியிருக்கிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோ பலரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த வீடியோவை ட்விட்டரில் பார்த்த பலரும் சிறு வயதில் சகோதர சகோதரிகளிடையே போடும் சண்டைகளை நினைவுபடுத்துவதாகப் பதிவிடுகின்றனர். இன்னும் சிலர் அம்மா கரடி ஓய்வெடுக்கும் நேரத்தில் இரண்டு குட்டிகள் சண்டையிடுவது அழகு எனப் பதிவிட்டு வருகின்றனர். பலரும் தங்களது பால்யகால நினைவுகளையே இந்தக் காணொளியைப் பார்த்த பின்பு தெரிவித்துள்ளனர். இதுவரை இதை 20 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.