ஆச்சர்யம்.. ஆனால் உண்மை.. 96 ஆண்டுகளில் குழந்தையே பிறக்காத ஒரு நாடு.. காரணம் என்ன?
உலகம் முழுவதும் குழந்தைப் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதற்காக ஜப்பான், ரஷ்யா, தென் கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வாரி வழங்கி வருகின்றன. மறுபுறம், கடந்த 96 ஆண்டுகளில், நாடு ஒன்றில் ஒரு குழந்தைகூட பிறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்று, வாடிகன் சிட்டி. இந்த நாடு, 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இங்குதான், கிறிஸ்தவர்களின் புனித இடமான, ரோமன் கத்தோலிக்க திருச்சபை அமைந்துள்ளது. உலகளவில் கத்தோலிக்க திருச்சபை, அதன் பாதிரியார்கள் மற்றும் முக்கிய மதத் தலைவர்கள் இந்த இடத்திலிருந்தே மேற்பார்வையிடப்படுகிறார்கள்.
ஆனால், இந்த நாட்டில், கடந்த 96 ஆண்டுகளில், ஒரு குழந்தைகூட பிறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நகரில் கிட்டத்தட்ட 900 பேர் வாழ்ந்துவரும் நிலையில், இங்குள்ள கர்ப்பிணிகள் ரோம் நகருக்குச் சென்றுதான் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதனால், வாடிகன் நகரில் இதுவரை ஒரு குழந்தைகூடப் பிறந்ததில்லையாம். மேலும், இங்கு இதுவரை ஒரு மருத்துவமனைகூட அமைக்கப்படவில்லை. ஏராளமான கோரிக்கைகள் இருந்தபோதிலும், மருத்துவமனை இங்கு கட்டப்படவில்லை. இதன் விளைவாக, மோசமாக நோய்வாய்ப்பட்ட நபர்கள் அல்லது கர்ப்பிணித் தாய்மார்கள் மருத்துவ உதவிக்காக ரோம் நகருக்குச் செல்ல வேண்டியுள்ளது. மேலும் ரோமின் மையப்பகுதியிலேயே வாடிகன் சிட்டி அமைந்திருப்பதால், இங்கு மருத்துவமனையின் தேவை இல்லாமல் போயிருக்கிறது. அது மட்டுமல்ல, இந்த நகரின் பரப்பளவும் மிகச் சிறியது என்பதாலும், அருகில் உள்ள ரோம் நகரின் வளர்ச்சியும் இந்த முடிவுக்கு உறுதுணையாக அமைந்துவிட்டன. இதன் காரணமாகத்தான், அந்நாட்டில் 96 ஆண்டுகளாக குழந்தைகள் பிறக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், இந்த வாடிகன் சிட்டி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது வியக்கத்தக்க வகையில் அதிக குற்ற விகிதத்தை எதிர்கொள்கிறது. இதற்குக் காரணம், மில்லியன் கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதே ஆகும். அவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட குற்றங்களுக்கு இலக்காகிறார்கள். பொதுவான குற்றங்களில் கடைத் திருட்டு, பணப்பையை பறித்தல் மற்றும் பிக்பாக்கெட் திருட்டு ஆகியவை அடங்கும். மறுபுறம், உலகின் மிகச்சிறிய ரயில் நிலையம் என்ற பெருமையை வாடிகன் நகரம் பெற்றுள்ளது. ’சிட்டா வாடிகானோ’ என்று பெயரிடப்பட்ட இந்த நிலையம், இரண்டு தண்டவாளங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் 300 மீட்டர் நீளம் கொண்டது. போப் பியஸ் XI ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த ரயில் பாதை மற்றும் நிலையம் சரக்கு போக்குவரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, வாடிகன் நகரத்திற்குள் வழக்கமான பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதில்லை.
வாடிகன் நகரத்தைப் போன்று, பிரிட்டிஷ் வெளிநாட்டுப் பிரதேசமான பிட்கெய்ர்ன் தீவுகளிலும் பல ஆண்டுகளாக பிறப்புகள் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இங்கு வெறும் 50க்கும் குறைவான மக்களே இருப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றன. அதேபோல், அண்டார்டிகாவிலும் சமீபகாலமாக பிறப்புகள் பதிவு செய்யப்படவில்லை. இது ஒரு கண்டமாக இருந்தாலும், இறையாண்மை கொண்ட நாடு அல்ல. மேலும், அந்தப் பகுதி முதன்மையாக அறிவியல் ஆராய்ச்சிக்காக நியமிக்கப்பட்டிருப்பதால், அங்கு பிறப்புகள் அரிதானவையாக உள்ளன.