கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகும் கர்ப்பம் - ஆய்வில் வெளியான தகவல்

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகும் கர்ப்பம் - ஆய்வில் வெளியான தகவல்
கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகும் கர்ப்பம் - ஆய்வில் வெளியான தகவல்

அமெரிக்காவில் மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக கருப்பையைப் பெற்ற பெண்களில் பலர், கர்ப்பம் அடைவதில் வெற்றி அடைந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்பது கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கூற்று. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், பெண்களால் மட்டும்தான் பத்து மாதங்கள் சுமந்து பிள்ளை பெற முடியும் என்பது இயற்கை தந்த சிறப்பான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட பெண்களில் சிலர், பல்வேறு காரணங்களால் கர்ப்பம் தரிக்க முடியாமல் போவது உண்டு. ஆனால் 21-ம் நூற்றாண்டில் சாதிக்க முடியாத விஷயங்களையும், அறிவியலாலும், அரிய கண்டுபிடிப்புகளாலும் வியத்தகு விஷயங்களை நாம் மேற்கொள்கிறோம்.

அந்த வகையில் அமெரிக்காவில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கர்ப்பம் தரிப்பது சாத்தியமாவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த 33 பெண்களுக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 19 பேர் அதாவது 58 சதவிகிதம் பேர் வெற்றிக்கரமாக கர்ப்பம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த 19 பேரும் மொத்தம் 21 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஜமா சர்ஜரி’ (JAMA Surgery, Peer-reviewed journal) என்ற சர்வதேச இதழில் ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். மேலும், கருப்பை மாற்று அறுவை சிகிச்சையை, மருத்துவ உண்மையாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிகிச்சைக்கு வரும் பெண்களில் பலர் பிறப்பாலே கருப்பை இல்லாமல் இருக்கின்றனர் அல்லது வேறு காரணங்களுக்காக கருப்பை நீக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்.

இந்த சிகிச்சையின் வாயிலாக ஏறக்குறைய ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க பெண்கள் பயனடையலாம் என்று டல்லாஸின் பேலர் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் ஆய்வுத் தலைவர் மருத்துவர் லிசா ஜோஹன்னசன் தெரிவித்துள்ளார். கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் கருப்பை நன்கொடை பெறும் 74 சதவிகிதப் பெண்களில், அந்த சிகிச்சை முடிந்து ஒரு வருடத்திற்குப் பிறகும் கருப்பை நன்றாக செயல்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுப் பெண்களில், 83 சதவிகிதம் பேர் உயிருடன் குழந்தையை பெற்றடுப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை முடிந்தநிலையில்,  சில காலத்திற்குப் பின்னர் அதாவது சராசரியாக 14 மாதங்களில் சிசேரியன் மூலம் இந்தப் பெண்கள், குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இதில் பாதிப் பெண்கள் சிகிச்சை முடிந்து 9 மாதங்களிலேயே குழந்தை பெற்றெடுத்துள்ளனர். எனினும் கருப்பை நன்கொடை பெறும் பெண்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும், பிரசவத்திற்குப் பிறகு, நோய்த்தடுப்பு மருந்துகளை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகவும், நன்கொடையாக பெற்ற கருப்பை அகற்றப்படுகிறது.

உலக அளவில் பேலர் பல்கலைக்கழக மருத்துவ மையம், கிளீவ்லேண்ட் கிளினிக் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை ஆகியவற்றில்தான் அதிகளவில் இந்த கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மிகவும் சிக்கலான அதே சமயத்தில் அதிக செலவு காரணமாக இந்த சிகிச்சை மேற்கொள்ள சிலப் பெண்களுக்கு தடையாக இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சை என்பது உண்மையில் ஒரு கருவுறுதல் சிகிச்சை என்றும், சில காப்பீட்டு நிறுவனங்கள் இந்த சிகிச்சைக்கான தொகையை மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் மூன்றில் இரண்டு பங்கு பெண்களுக்கு, கருப்பை ஒரு உயிருடன் இருக்கும் நன்கொடையாளரிடமிருந்துதான் பெறப்படுகிறது என்றும், இதில் நான்கில் ஒருவர் அறுவை சிகிச்சையின் சிக்கலை அனுபவிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இறந்தவர்களிடமிருந்து பெறப்படும் கருப்பை நன்கொடை போதுமானதாக இல்லாதபோது, உயிருடன் இருப்பவர்களிடமிருந்து பெறப்படும்போது சிக்கலை ஏற்படுத்திக்கொள்ளாமல், ஆபத்தை குறைக்கும் வகையில் பாதுகாப்பாக பெற வேண்டும் என்றும் அந்த ஆய்வில் நாஷ்வில்லில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள் ரேச்சல் ஃபோர்ப்ஸ் மற்றும் சேத் கார்ப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் முதல்முறையாக புனேவில் இந்த கருப்பை மாற்று அறுவை சிகிச்சை கடந்த 2017-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதில் தான் பிறந்த தனது தாயின கருப்பையே நன்கொடையாக கிடைக்க, மீனாட்சி வாலன் என்கிறப் பெண் கருப்பை மாற்று அறுவை சிகிச்சைப் பெற்று, அதன்பிறகு 2018-ம் ஆண்டு பெண் குழந்தை ஒன்றையும் பெற்று எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com