இரண்டாம் உலகப்போரில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பலின் பாகங்கள் கண்டுபிடிப்பு
72 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப்போரில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
72 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய நீர் மூழ்கி கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பல் ‘இந்தியானாபொலிஸ்’-இன் பாகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கப்பல் பசிபிக் பெருங்கடலில் 18 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானில் அணு குண்டு போடுவதற்கான மூலப்பொருள்களை கொண்டு சேர்த்துவிட்டு திரும்பும்போது 1945 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி, இந்த அமெரிக்க போர்க்கப்பலை ஜப்பானிய நீர் மூழ்கி கப்பல் தாக்கியது. இந்த தாக்குதலில் நிர்மூலமான அமெரிக்க போர் கப்பலில் 1,196 பேர் இருந்தனர்.
கப்பல் மூழ்கிய நிலையில் 800-க்கும் மேற்பட்டோர் கடலில் உயிருடன் தத்தளித்தனர். சுறாக்கள் அதிகமுள்ள அந்த பகுதியிலிருந்து இறுதியாக 312 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். கப்பல் மூழ்கிய இடம் குறித்து கடல் ஆராய்ச்சியாளர் ஒருவர் 2016 ஆம் ஆண்டு சில தகவல்களை வெளியிட்டார். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் அமெரிக்க போர் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பணியில் ஈடுபட்ட குழுவின் தலைவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவருமான பால் ஆலன் தெரிவித்துள்ளார்.