‘போரை கண்டிக்கணும்’ உக்ரைன் போரின் தாக்கம் குறித்து மக்களவையில் விரிவான விவாதம்-முழுவிவரம்

‘போரை கண்டிக்கணும்’ உக்ரைன் போரின் தாக்கம் குறித்து மக்களவையில் விரிவான விவாதம்-முழுவிவரம்

‘போரை கண்டிக்கணும்’ உக்ரைன் போரின் தாக்கம் குறித்து மக்களவையில் விரிவான விவாதம்-முழுவிவரம்
Published on

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததால், இரண்டு முறை மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உணவு இடைவேளைக்குப் பிறகு உக்ரைன் போர் தாக்கம் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.

காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், உக்ரைன் நாட்டில் சிக்கியிருந்த இந்திய மாணவர்களை மீட்டதற்கு மத்திய அரசுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதே சமயத்தில், போருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரியான திசையில் பயணிக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.

எரிபொருள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்ற பொருட்களை இறக்குமதி செய்ய, கூடுதல் விலை கொடுக்க வேண்டிய நிலையில், பணவீக்கம் அதிகரிக்காமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள். மீட்கப்பட்ட மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர்.

திமுக சார்பாக பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், எந்த வகையிலும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க முடியாது எனவும், உலகில் எங்கே போர் நடந்தாலும் அதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உக்ரைன் நாட்டில் சிக்கியிருந்த தமிழக மாணவர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகளை அவர் நினைவு கூர்ந்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பாக மணீஷ் திவாரி மற்றும் சசி தரூர் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்று, உலக அரங்கில் இந்தியா தன்னுடைய நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டனர். உக்ரைன் போர் மற்றும் கொரோனா வைரஸ் முடக்கம் ஆகியவை, இந்தியாவில் மருத்துவம் படிக்க கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதை எடுத்துக்காட்டி உள்ளன என சசிதரூர் குறிப்பிட்டார்.

இந்தியாவிலேயே மருத்துவம் படிக்க கூடுதல் வாய்ப்பு கிடைத்தால், உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று மருத்துவம் படிக்க வேண்டிய கட்டாயம் இந்திய மாணவர்களுக்கு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். இந்த விவாதத்தை தொடங்கி வைத்த கேரளாவின் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்பி என்.கே. பிரேமச்சந்திரன், அரசு தனது கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு, ஆதரவு அளிப்பது போல எந்த நடவடிக்கையும் இருக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார். அதே சமயத்தில் நமது நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் அண்டை நாடுகள் மூலமாக ஏற்படும் அச்சுறுத்தல்களை கணக்கில் கொள்ள வேண்டும் என அவர் சூசகமாக விளக்கினார்.

முன்னதாக உணவு இடைவேளைக்கு முன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் பதாகைகளை ஏந்தி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை ஏற்றத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். மக்களவை முதலில் 12 மணி வரையும் பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டநிலையில், பின்னர் பட்டயக்கணக்காளர்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்த பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

பின்னர் டெல்லியில் மூன்று மாநகராட்சிகளை ஒன்றாக இணைப்பதற்கான மசோதாவை, உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவுக்கு ஏற்கனவே மக்களவை ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com