ஈரானுக்கு அழுத்தம் கொடுத்த ட்ரம்ப்.. சரிந்த ரியாலின் மதிப்பு!
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பையும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார். அந்த வரிசையில் தற்போது ஐநாவின் முக்கிய அமைப்பான மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். மத்திய கிழக்கு போரில் ஐநா மனித உரிமை கவுன்சில் இஸ்ரேல் மீது பாரபட்சமாக நடந்துகொள்வதாக அந்நாடும் அமெரிக்காவும் விமர்சித்து வந்த நிலையில் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் முடிவால் மனித உரிமை கவுன்சிலுக்கு வரும் நிதி நின்று விடும் என்பதோடு பாலஸ்தீன அகதிகளுக்கும் நிதியுதவிகள் வெகுவாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐநாவின் கல்வி, அறிவியல் கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்குமாறும் அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஐநாவின் மற்றொரு அமைப்பான சர்வதேச சுகாதார நிறுவனத்திலிருந்தும் அமெரிக்கா அண்மையில் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஈரானுக்கு அதிகபட்ச நெருக்கடி அளிக்கப்படும் என ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், ஈரான் மீது அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் உத்தரவுகளிலும் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “என்னை ஈரான் படுகொலை செய்ய முயற்சி செய்தால் அந்த நாடே இருக்காது. நாட்டில் ஒன்றுமே இல்லாத அளவிற்கு ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும். இதுதொடர்பாக தனது ஆலோசர்களுக்கு அறிவுகளை வழங்கி இருக்கிறேன்” என எச்சரித்துள்ளார். இதன் எதிரொலியாக ஈரானின் பணமான ரியாலின் மதிப்பு டாலருக்கு நிகராக 8 லட்சத்து 50 ஆயிரமாக சரிந்தது.
முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ட்ரம்ப் நூலிழையில், காதில் காயத்துடன் உயிர் தப்பினார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நபர், சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, ட்ரம்பை கொலை செய்வதற்கு ஈரான் நாட்டில் சதித் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. ஈரான் நாட்டின் குத்சு படையின் தலைவராக இருந்தவர் காசிம் சுலைமானி. இவர், கடந்த 2020ஆம் ஆண்டு ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப் மற்றும் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்டோருக்கு ஈரானில் இருந்து கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. இதன் விளைவாகவே தற்போதும் ட்ரம்புக்கு எதிராக தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருவதாகவும், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரானுக்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.