வரிவிதிப்பு விவகாரம் | ட்ரம்பைச் சந்தித்த மெலோனி.. மனம் மாறிய அமெரிக்கா!
அதிபராகப் பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தியிருந்தார். கடந்த 9ஆம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு தொடங்க வேண்டிய நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார். எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்துள்ளார். சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125% ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது ஆரம்பத்தில் 20 சதவீத வரி விதித்து பின்னர் 90 நாட்களுக்கு அதை ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில்வெள்ளை மாளிகையில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேசினார். வரிகளுக்குப் பிறகு வர்த்தகம் குறித்து விவாதிக்க அவரைச் சந்தித்த முதல் ஐரோப்பியத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றதால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மெலோனியைப் பாராட்டியுள்ளார். மேலும் ரோமுக்குச் செல்வதற்கான அவரது அழைப்பையும் ஏற்றுக்கொண்டார்.
மெலோனியை சந்தித்தது குறித்துப் பேசிய ட்ரம்ப், "எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் ஒரு சிறந்த பிரதமர். அவர் இத்தாலியில் சிறப்பாகச் செயல்படுகிறார். அவரிடம் சிறந்த திறமை இருக்கிறது. மேலும் அவர், உலகின் உண்மையான தலைவர்களில் ஒருவர். நாங்கள் ஒன்றாகவும் நாடுகளாகவும் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்துடன் 100% ஒரு வர்த்தக ஒப்பந்தம் இருக்கும். ஆனால் அது ஒரு நியாயமான ஒப்பந்தமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, மெலோனி அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸுடன் கலந்துரையாட இருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தையில் வரிகள் மற்றும் பாதுகாப்புச் செலவினங்களில் இருநாடுகளும் கவனம் செலுத்தக்கூடும் எனத் தெரிகிறது.
ஜனவரி 20 அன்று ட்ரம்பின் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட ஒரே ஐரோப்பிய தலைவர் மெலோனிதான். குடியேற்றம் மற்றும் உக்ரைன் உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளில் அதிபர் ட்ரம்புவுடன் அவர் ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.