அமெரிக்கா: கலிபோர்னியா மாகாணத்தில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் வியாழக்கிழமை அமெரிக்க நேரப்படி காலை 10.45க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும், சான் பிரான்சிஸ்கோ மிருகக்காட்சி சாலையில் பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும், அங்கிருக்கும் விலங்குகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை மையம் 2ஆம் நிலை சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்க நேரப்படி காலை 11:10 மணிக்கு ஃபோர்ட் பிராக் அருகே தொடங்கி, வடக்கு கலிபோர்னியா, தெற்கு ஓரிகானில் உள்ள கடற்கரையைக் கடந்து 12:10 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவுக்கு சுனாமி வர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடற்கரை பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின் கடல் கொந்தளிப்பு இல்லாமல் காணப்பட்டதால் சுனாமி எச்சரிக்கை திரும்பபெறப்பட்டது.