மகளின் வகுப்பறைக்குள் நுழைந்த தாய்.. மாணவிகளின் மத்தியில் ஆசிரியையின் மூக்கு உடைப்பு!
அமெரிக்கா ஊடகம் ஒன்று தெரிவித்துள்ள இதுபற்றிய செய்தியில், நடுநிலைப் பள்ளி ஒன்றில் வகுப்பறைக்குள் புகுந்த பெண் ஒருவர், ஆசிரியை ஒருவரைத் தேடி அவரின் முகத்தில் சரிமாரியாகக் குத்துகளைவிட்டு அவரது மூக்கை உடைத்துள்ளார். இதில் அவர் அதிக காயப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, அந்தப் பெண் குத்துச் சண்டை வீராங்கனைபோல் நடந்துகொண்டதாக அதைப் பார்த்த மாணவிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது அந்த வகுப்பறையில் 25 மாணவிகள் இருந்தனர். அவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான அந்த ஆசிரியை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். பின்னர் ஆசிரியை அளித்த புகாரின்பேரில் தாக்கிய பிறகு வீடு திரும்பிய அந்தப் பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
விசாரணையில் அவரது பெயர் Lynzia Sutton என தெரியவந்துள்ளது. அவர், அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் தாயார் ஆவார். தன் குழந்தையை அந்த ஆசிரியை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், அந்த ஆத்திரத்திலேயே அவரைத் தாக்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டிருக்கும் அந்தப் பெண், உயரம் குறைவாக இருந்ததாலும், மாணவிகளைப் போன்று தோற்றமளித்ததாலும், மேலும் தலைக்கவசம் அணிந்திருந்தாலும் அவர், சுலபமாக பள்ளிக் கண்காணிப்பாளரைத் தாண்டி வகுப்பறைக்குள் நுழைந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு முன்பு, Lynzia Suttonவின் மகள் அந்த ஆசிரியையிடம் ’இதுகுறித்து என் அன்னை உங்களைக் கையாள்வார்’ என எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து Lynzia Suttonவின் தாய் ரோக்ஸான் தாம்ப்கின்ஸ், ”இந்த மோசமான நிகழ்வுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் அந்த ஆசிரியை குணமடைந்துவிடுவார் என்று நம்புகிறேன். பொதுவாக எந்த விஷயத்தையும் கையாள்வதற்கு ஒரு சிறந்த வழி இருக்கிறது. இதுகுறித்து பள்ளியில் நாங்கள் பேச இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, பாதிக்கப்பட்ட ஆசிரியை குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.