புவியீர்ப்பு விசையால் அலர்ஜி! ’3 நிமிடங்களில் மயங்கிவிழும் இளம் பெண்’ அரிய நோயால் அவதி!

புவியீர்ப்பு விசையால் அலர்ஜி! ’3 நிமிடங்களில் மயங்கிவிழும் இளம் பெண்’ அரிய நோயால் அவதி!
புவியீர்ப்பு விசையால் அலர்ஜி! ’3 நிமிடங்களில் மயங்கிவிழும் இளம் பெண்’ அரிய நோயால் அவதி!

பலருக்கும் உணவு, நீர், காற்று, மாசு என பலவற்றால் ஒவ்வாமை ஏற்படுவதை கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் யாருக்காவது புவியீர்ப்பு விசையால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா? புவியீர்ப்பு விசை இல்லையென்றால் இந்த பூமியின்மீது பொருட்கள் நிற்குமா? அல்லது நிலையாக இயங்கத்தான் முடியுமா? இப்படியிருக்க தனக்கு புவியீர்ப்பு விசையால் ஒவ்வாமை ஏற்படுவதாகவும் இதனால் ஒருநாளில் 10 முறைக்கும் மேல் மயங்கி விழுவதாகவும் கூறுகிறார் ஒரு பெண்.

அமெரிக்க கடற்படையில் முன்னாள் விமான டீசல் மெக்கானிக் லிண்ட்சி ஜான்சன்(28). அமெரிக்காவின் மைன் மாகாணத்திலுள்ள பாங்கோர் பகுதியைச் சேர்ந்த இவர் ஒருநாளில் 23 மணிநேரத்திற்கும் அதிகமான நேரத்தை தனது படுக்கையில் செலவிடுகிறார். இவரால் தனது சுயநினைவை இழக்காமல் 3 நிமிடங்களுக்கும் மேல் நிற்கமுடிவதில்லை. மேலும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற உணர்வை தவிர்க்க லிண்ட்சி தனது கால்களை குறுக்காகவே வைத்து உட்கார வேண்டியுள்ளது. சாப்பிடுவதற்கும், குளிப்பதற்கும் தவிர வேறு எதற்கும் எழுந்திருப்பதில்லை.

முதலில் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வயிறு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்பட்டார் லிண்ட்சி. இதனால் 2018ஆம் ஆண்டு அவர் மருத்துவ ரீதியான காரணங்களால் கடற்படையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் 6 மாதங்களுக்கு பிறகு கடுமையான வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. ஆண்டுகள் செல்ல செல்ல நிலைமை மோசமாகி வாந்தி எடுத்தல் மற்றும் ஒருநாளில் 10 முறைக்கும் மேல் மயங்கிவிழுதல் போன்ற அதீத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் postural tachycardia syndrome (PoTS)என்ற பிரச்னை அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பிரச்னை இருப்பவர்களுக்கு நேராக உட்கார்ந்தாலோ அல்லது நின்றாக இதயத்துடிப்பு அதிவேகமாக இருக்கும். லிண்ட்சி தனக்கு புவியீர்ப்பு விசையால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும் தற்போது தீவிர சிகிச்சைகளுக்கு பிறகு, அவர் மயங்கிவிழும் எண்ணிக்கை 3ஆக குறைந்திருக்கிறது. இருப்பினும் இவரால் இன்னும் தன்னை முழுமையாக பராமரித்துக்கொள்ள முடியவில்லை. இவருடைய கணவர் ஜேம்ஸ்(30)தான் பராமரிப்பாளராக இருந்துவருகிறார்.

லிண்ட்சி கடற்படையில் வேலை பார்த்தபோது இந்த பிரச்னை தொடங்கியிருக்கிறது. அங்குதான் இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்திருக்கிறது. இதனால் நாள்பட்ட வலியால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இருப்பினும் மருத்துவர்களால் அது என்ன பிரச்னை என கண்டறிய முடியவில்லை. இந்த பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பலமுறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் லிண்ட்சி. ஆனால், தனது கவலையே இதுபோன்ற அறிகுறிகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் அவர். இதனால் லிண்ட்சி கார் ஓட்டுவதை நிறுத்திவிட்டார். மேலும் தலைசுற்றல் ஏற்படும் என்பதால் கீழே குனிவதுகூட இல்லை.

கடந்த பிப்ரவரி மாதம் லிண்ட்சிக்கு சாய்வு சோதனை செய்யப்பட்டது. அது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஆக்சிஜன் அளவை கணக்கிடும் சோதனையாகும். அதன்பிறகே லிண்ட்சிக்கு PoTS பிரச்னை இருப்பது மருத்துவரீதியாக உறுதிசெய்யப்பட்டது. இப்போது பீட்டாபிளாக்கர்ஸ் சிகிச்சையில் அவர் இருக்கிறார். இதனால் ஒரு நாளைக்கு மூன்று முறையாக அவரது மயக்கம் குறைந்திருக்கிறது. மேலும் அவரது குமட்டலும் குறைந்திருக்கிறது.

இதுகுறித்து லிண்ட்சி கூறுகையில், ‘’எனக்கு புவியீர்ப்பு விசையால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது. மூன்று நிமிடங்களுக்கும் மேல் மயங்கிவிழாமல், நோய்வாய்ப்படாமல் என்னால் நிற்கமுடியாது. நான் படுத்திருக்கும்போது நன்றாக உணர்கிறேன். 23 மணிநேரத்திற்கும் மேலாக, நாள்முழுவதும் எனது படுக்கையில்தான் இருக்கிறேன். நான் எனது 28 வயதிலேயே நாற்காலியில் அமர்ந்து குளிப்பேன் என யோசித்ததில்லை. நான் எனது வீட்டைவிட்டு வெளியேற முடியாது. இதிலிருந்து குணமாக முடியாது. ஆனால் நான் எனது கணவர் ஜேம்ஸுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

வலியால் அலறும்போது மோசமாக உணர்வேன். The Exorcist திரைப்படத்தில் வருவதைப்போல் வாந்தி எடுப்பேன். அது மிகவும் பயமுறுத்துவதைப் போன்று இருக்கும். எனது மயக்கநிலை அங்கிருந்துதான் மோசமானது. நான் எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்தேன். ஆனால் மயக்கம் வருவதால் சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் என எங்கு சென்றாலும் நான் உட்கார்ந்தே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

எனது இதயத்துடிப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதால் இதயத்துடிப்பை கண்காணிக்க மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டேன். எனக்கு PoTS இருக்கலாம் என்பதை கண்டறிந்த மற்றொரு இதயநோய் நிபுணரிடம் இறுதியாக என்னால் பேச முடிந்தது. இறுதியாக எனக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. இப்போது என்னால் சிகிச்சை எடுக்கமுடியும். இருந்தாலும் இதுவரை என்னால் எந்தவேலையும் செய்யமுடிவதில்லை. இது மிகவும் பலவீனப்படுத்துகிறது. என்னால் வீட்டுவேலைகளை செய்ய முடியவில்லை. ஜேம்ஸ்தான் சமையல், வீட்டை சுத்தம் செய்தம் மற்றும் என்னை குளிப்பாட்டுதல் போன்ற அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

நான் பல்துலக்காமல் பல வாரங்களைக்கூட கழித்திருக்கிறேன். ஒருநாள் நான் ஜேம்ஸ்க்காக உணவு சமைத்தாலும் மூன்று நாட்கள் வேறு எந்த வேலையும் செய்யமுடியாது. நான் படுத்திருக்கும் வரை நன்றாக உணர்கிறேன். எழுந்து நின்றவுடன் தலைசுற்றி மயங்கி விழுந்துவிடுவேன். இந்த புதிய வாழ்க்கையை நான் பழக்கப்படுத்தி அதற்கேற்றார்போல் வாழ்க்கைமுறையை மாற்றியமைக்க வேண்டும். நான் மொபைலிட்டி உதவிகளைப் பயன்படுத்துகிறேன். அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

என்னிடம் இருப்பவைகளுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்த நிலையிலும் என்னால் இசை, பிஸினஸ் போன்றவற்றை கற்றுக்கொள்ள முடிகிறது. எனது காலடியில் இருந்த விரிப்பு கிழிந்துவிட்டது. இனி நாள்முழுதும் சூப்பர் ஆக்டிவாக மாறிவிட்டேன். என்னால் முடிந்ததைச் செய்ய முடியாது, ஆனால் இப்போது நான் அதைச் சமாளிக்கிறேன்’’ என்கிறார். கேட்பதற்கு நம்ப முடியாததாக இருந்தாலும் அதுதான் உண்மை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com