ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்த வரை இந்தியா ரஷ்யா உடன் நெருக்கம் காண்பித்து வந்தது. மேலும் இந்தியாவுக்கு தேவையான ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்தே அப்போதைய மத்திய அரசு வாங்கி வந்தது. இதன்பின் வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு, ரஷ்யாவை விட அமெரிக்க உடன் நெருக்கம் காண்பித்தது. அமெரிக்காவிடம் இருந்து சில ராணுவ தளவாடங்களை வாங்கத் தொடங்கியது. இதற்கிடையே, இமயமலை பகுதியில் அடிக்கடி சீனா அத்துமீறி வந்தது. இதை கட்டுப்படுத்த முடிவெடுத்த மத்திய அரசு இந்திய ராணுவத்தை பலப்படுத்த தீர்மானித்தது.

அதன்காரணமாக, 10 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகள் ஒப்பந்தம் மேற்கொண்டது. 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் 2019ல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த எஸ் 400 ஏவுகணைகள், தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளைக்கூட மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதனால் முதல்கட்டமாக 800 மில்லியன் டாலரை இந்தியா ரஷ்யாவிடம் 2019லேயே கொடுத்துவிட்டது. ஆனால் இன்னும் ஏவுகணைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. முதல் ஏவுகணை இந்த ஆண்டு இறுதியில் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க புதிய முட்டுக்கட்டை ஒன்றை போடுகிறது. ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று தற்போது ட்ரம்ப் தலைமையிலான அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் இன்னும் சில தினங்களில் பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடன் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்க போகிறார் எனத் தெரியவில்லை. ஆனால் பைடன் அரசு இந்தியாவுக்குச் சாதகமான முடிவை எடுக்கும் என்று மத்திய அரசு தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால், வெள்ளை மாளிகை வட்டாரமோ, ``பைடன் அரசு இந்த விவகாரத்தில் இந்தியா மீது கடுமையான விளைவை ஏற்படுத்தும்" என எச்சரித்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள அமெரிக்கத் தூதர், ``இந்தியாவின் முடிவு அதிருப்தியை தருகிறது. ரஷ்யா - இந்தியா ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவுக்குத் தெரியும். எனினும் தளவாடங்களை இன்னும் ரஷ்யா ஒப்படைக்காததால் அமெரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்கள் கூட்டணியில் இருக்கும் நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்களை வாங்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.இதனால் இந்தியா-ரஷ்யா ஒப்பந்தத்திற்கு மட்டும் நாங்கள் சலுகை அளிக்க முடியாது. இதனால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், இந்தியா இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, "இந்தியா - அமெரிக்கா இடையே நல் உறவு நீடித்து வருகிறது. அதே நேரம் ரஷ்யாவுடனும் ஒரு நல்ல உறவை பேணி வருகிறது இந்தியா. மேலும் இந்தியா எப்போதும் ஒரு சுதந்திர வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ளது. எனவே இது ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களைக் கொள்முதல் செய்வதிலும் பொருந்தும்" எனக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த பிடிவாதம் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, இதுபோல், ரஷ்யாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்களை வாங்கிய துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com