\
கோப்புபடம்
கோப்புபடம்Reuters

ஈராக்கில் இருந்து வெளியேறியது அமெரிக்கா.. 23 ஆண்டுப் பயணத்துக்கு முடிவு.. என்ன நடந்தது?

ஈராக்கின் வடக்கு மாகாணமான இர்பிலில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் கடைசி ராணுவப் படைகளும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்றுடன் வெளியேறியிருக்கிறது.
Published on: 

கடந்த 23 ஆண்டுகளாக ஈராக்கில் செயல்பட்டு வந்த கடைசி ராணுவப் படைகளும் அந்நாட்டில் இருந்து வெளியேறியிருப்பதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகன் அறிவித்திருக்கிறது. ஈரான் ஆதரவுப் பெற்ற ஆயுதக் குழுக்களின் ஆதிக்கம் ஈராக்கில் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

US Troops Leave Iraq After 23 Years, Ending Anti-ISIS Mission
சதேம் உசேன்Reuters

அணு ஆயுதங்கள் மற்றும் ரசாயனம் கலந்த ஆபத்தான ஆயுதங்களை ஈராக் தயாரிப்பதாகக் கூறி, கடந்த 2003ஆம் ஆண்டு சதாம் உசேன் தலைமையிலான ஆட்சியை அகற்றுவதற்காக அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈராக்கிற்குள் நுழைந்தன. தொடர்ந்து, அதே ஆண்டில் கைது செய்யப்பட்ட அவர், 2006-ம் ஆண்டில் தூக்கிலடப்பட்டார். எனினும், பாதுகாப்புக் காரணங்களைக் கூறி அங்கே தங்கியது அமெரிக்க ராணுவம். இதையடுத்து, 2011ஆம் ஆண்டு முதல் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறத் தொடங்கின. இந்த வெளியேற்றம், ஐ.எஸ்.ஐ.ஸ் (ISIS) ஆயுதக் குழுவின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. குறிப்பாக, 2014ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஈராக்கின் பெரும் பகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, அந்நாட்டு அரசின் அழைப்பின் பேரில் அமெரிக்கா மீண்டும் ஈராக்கிற்கு ராணுவப் படைகளை அனுப்பியது.

இதையடுத்து, 2017ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிராந்திய கட்டுப்பாடு அமெரிக்கப் படைகளின் உதவியுடன் முடிவுக்கு கொண்டு வந்தது ஈராக். ஆனால், அதன்பிறகும், அமெரிக்கப் படைகள் ஈராக் பாதுகாப்புப் படைகளுக்கு உளவுத்தகவல், கண்காணிப்பு மற்றும் ராணுவப் பயிற்சி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வந்தன. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் ஈராக் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்க ராணுவப் பணியை படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

ஈராக்
ஈராக்Reuters

அந்தவகையில், தற்போது, ஈராக்கின் வடக்கு மாகாணமான இர்பிலில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் கடைசி ராணுவப் படைகளும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்றுடன் வெளியேறியிருக்கிறது. அதேசமயம், இந்த வெளியேற்றம் ஈராக்கின் பாதுகாப்பு குறித்த கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் தொடர்ந்து ஈராக்கில் வலுவாக உள்ளன. அதேபோல், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மறைமுகமாகச் செயல்படும் ‘ஸ்லீப்பர் செல்கள்’ இன்னும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஈராக்கின் வடக்குப் பகுதியான கிர்குக் (Kirkuk) அருகே ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடன் ஈராக் பாதுகாப்புப் படைகள் மோதியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச்சூழலில் தான், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள ஈராக் பிரதமர் அலி அல்-ஸைதி, நாட்டிலுள்ள ஐஎஸ் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக ஈராக் படைகள் தனியாக நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com