\
Iran war
Iran war Grok

அமெரிக்க வீரர்கள் பலியான கொடூரம்.. ஈரானுக்கு உதவி செய்த சீனா? உலகையே உலுக்கும் புதிய தகவல்!

ஈரான்–சீனா நெருக்கம் அமெரிக்கா–சீனா உறவுக்கு புதிய சோதனையாக மாறியுள்ளது..
Published on
Summary

ஈரான்–அமெரிக்கா மோதலில் சீன நிறுவனங்கள் இரகசியமாக ஈரானுக்கு ராணுவ, தொழில்நுட்ப உதவி செய்ததாக சர்ச்சை வெடித்துள்ளது. ஜோர்டானில் உள்ள Muwaffaq Salti தளத்தின் துல்லிய செயற்கைக்கோள் படங்கள் சீனாவால் ஈரானுக்கு சென்றதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. இந்த தகவல்கள் அமெரிக்க வீரர்கள் பலியான ஜூலை 17 தாக்குதலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

செய்தியாளர் - மீரா

ஈரான்–அமெரிக்கா இடையேயான மோதலில் சீன நிறுவனங்கள் பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக ஈரானுக்கு மறைமுகமாக உதவியுள்ளன என்பது பல்வேறு சர்வதேச ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் (Drones) தயாரிப்பதற்குத் தேவையான செமிகண்டக்டர்கள், சென்சார்கள் போன்ற இரட்டைப் பயன்பாட்டு (Dual-use) தொழில்நுட்பக் கூறுகளை சீன நிறுவனங்கள் வழங்கியிருந்தது. மேலும் தோளில் வைத்துச் சுடும் ஏவுகணைகள் (MANPADS) போன்ற ஆயுதங்களை ஈரான் வாங்குவதற்கு சீனாவைச் சேர்ந்த தரகர்கள் உதவியதாகக் கண்டறியப்பட்டிருந்தது.

iran war
iran war reuters

இதனால் ஈரானுக்கு ஆயுதங்கள், ஏவுகணை உந்துவிசைக்கான மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் MizarVision, The Earth Eye, Hengli Group உள்ளிட்ட பல சீன மற்றும் ஹாங்காங் நிறுவனங்கள் மீது அமெரிக்க கருவூலத்துறை (US Treasury Department) கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது

இந்நிலையில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது தொடர்பாக சீனாவின் பங்கு குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மிகவும் துல்லியமான செயற்கைக்கோள் படங்களை, ஈரானுக்கு சீன நிறுவனங்கள் வழங்கியதாகக் கூறப்படும் தகவல் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

Wall Street Journal வெளியிட்ட செய்தியின்படி, ஜோர்டானில் உள்ள Muwaffaq Salti Air Base தொடர்பான மிகவும் துல்லியமான செயற்கைக்கோள் படங்கள், ஜூலை 17ஆம் தேதி அந்த தளத்தின் மீது ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுடன் தொடர்புடையதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

iran war
iran war reuters

ஆனால், இதில் எந்த சீன நிறுவனங்கள் ஈடுபட்டன என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மேலும், சீன அரசு நேரடியாக ஈரானுக்கு ராணுவ உதவி வழங்கியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டவில்லை.

ஜூலை 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில், அமெரிக்க தளத்தில் இருந்த குடியிருப்பு பகுதி குறிவைக்கப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்; மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

அமெரிக்க அதிகாரிகள் இந்த செயற்கைக்கோள் படங்கள் குறித்து சீன அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, ஆதாரங்களை வழங்குமாறு சீனா கேட்டதாகவும், சீன நிறுவனங்கள் ஈரானுக்கு உதவியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை ஏற்க மறுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஈரானுக்கு சீனாவின் செயற்கைக்கோள் மற்றும் உளவுத்துறை தொழில்நுட்பங்கள் சென்றிருப்பது குறித்த பழைய தகவல்களும் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

iran war
iran warreuters

Financial Times செய்தியின்படி, ஈரானின் IRGC செப்டம்பரில் சுமார் 36 மில்லியன் டாலர் மதிப்பில் TEE-01B என்ற சீன உளவு செயற்கைக்கோளை ரகசியமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை கண்காணிக்க இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பெய்ஜிங்கைச் சேர்ந்த Emposat நிறுவனத்தின் தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களையும் IRGC பயன்படுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், ஜூலை 17 தாக்குதலுடன் தொடர்புடைய செயற்கைக்கோள் படங்களை வழங்கியதாக அமெரிக்கா சந்தேகிக்கும் நிறுவனங்களில் TEE-01B அல்லது Emposat இடம்பெற்றுள்ளதா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.

இதற்கிடையே, ஈரானுக்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்வதாக வெளியான தகவல்களின் தாக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறைத்து மதிப்பிட்டிருந்தார். சீன அதிபர் ஷி ஜின்பிங் விரைவில் டிரம்பை சந்திக்க உள்ள நிலையில், இந்த புதிய தகவல் அமெரிக்கா–சீனா உறவுகளில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Iran war
ஈரான் ஏன் ஜோர்டானை குறிவைக்கிறது? பின்னணி என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com