வளைகுடாவில் மீண்டும் போர் பதற்றம்.. தூதகரங்களை முடக்கிய அமெரிக்கா!
மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து, 11 அமெரிக்க தூதரகங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் தாக்குதல் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. கெஷ்ம் தீவில் வெடிச்சத்தங்கள் மற்றும் MQ-1 ட்ரோன் சுட்டு வீழ்த்தல் போன்ற சம்பவங்கள் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளன.
செய்தியாளர் - M.மீரா
மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் அமெரிக்க தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களின்படி, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க அரசு அதிகாரிகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்த முயற்சி செய்யலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் தூதரகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் 11 அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரகப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜெருசலேம், ஜோர்டானின் அம்மான், லெபனானின் பெய்ரூட், கத்தாரின் தோஹா, பஹ்ரைனின் மனாமா, ஓமனின் மஸ்கட், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் மற்றும் ஏமன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கான அமெரிக்காவின் தூதரகமும் இதில் அடங்கும்.
மேலும், ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல்வேறு முனைகளில் மோதல் வெடிக்கலாம் என்ற அச்சமும் அமெரிக்காவிடம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரானின் கெஷ்ம் தீவில் நவம்பர் 7-ம் தேதி இரண்டு முறை வெடிச்சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு ஏவுகணைகள் தீவைத் தாக்கியிருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும், தாக்குதல் குறித்த தகவலை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் MQ-1 ரக ஆளில்லா விமானத்தைத் தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்திருந்தது. இதுவரை 16 அமெரிக்க MQ-1 ட்ரோன்களை அழித்துள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ள கெஷ்ம் தீவு, ஈரானின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கண்காணிப்பில் முக்கிய இடமாக உள்ளது. இந்தச் சூழலில், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

