"இளவரசர்தான் காரணம்!" - பத்திரிகையாளர் கஷோகி கொலையில் சவுதி மீது அமெரிக்கா காட்டம்

"இளவரசர்தான் காரணம்!" - பத்திரிகையாளர் கஷோகி கொலையில் சவுதி மீது அமெரிக்கா காட்டம்
"இளவரசர்தான் காரணம்!" - பத்திரிகையாளர் கஷோகி கொலையில் சவுதி மீது அமெரிக்கா காட்டம்

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை படுகொலை செய்ய உத்தரவிட்டது சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்தான் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. சவுதி இளவரசரின் உத்தரவில்லாமல் இந்தக் கொடூர கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என அடித்துச் சொல்கிறது அமெரிக்கா. சொல்லப்போனால், நீண்ட நாட்களாக நட்புறவுடன் இருக்கும் சவுதி இளவரசர் மீது வெளிப்படையான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது அமெரிக்கா.

"துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்த சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை சுட்டுப்பிடிக்க சவுதி அரசுதான் ஒப்புதல் அளித்தது" என்று அமெரிக்க உளவுத்துறை சார்பில் அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அமெரிக்கா இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980-களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் வெளியுலகுக்குத் தெரிய ஆரம்பித்த காலகட்டத்தில், கஷோகி தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர்.

அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களையும் விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர். துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்ய இருந்தார். ஆனால், அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்

இதையடுத்து, படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரைக் கவுரப்படுத்தும் வகையில் 'கஷோகி சட்டம்' என்ற புதிய சட்டம் ஒன்றை அமெரிக்கா அமல்படுத்தியது. அதன்படி, பத்திரிகையாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவோரை அமெரிக்காவில் நுழைய தடை விதித்தது. உடனடியாக சவுதியைச் சேர்ந்த 76 பேரை 'பிளாக்' லிஸ்ட் செய்தது.

கஷோகி படுகொலைக்கு சவுதி இளவரசர்தான் காரணம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள அமெரிக்கா, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'ஜமால் கஷோகி சூழ்ச்சி செய்து இஸ்தான்புல் வரவழைக்கப்பட்டுள்ளார். தனது காதலியுடன் துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்குள் சென்றவர் பின்னர் திரும்பி வரவேயில்லை. தூதரகத்துக்குள்ளேயே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அங்கேயே அவரது உடல் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டுள்ளது. பின்னர் அவரது சடலத்தை அமிலத்தை ஊற்றி அழித்துள்ளனர். இத்தகைய கொடூரச் செயலுக்கு நிச்சயமாக முகமது பின் சல்மான பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். கொலை நடந்த முறையே சவுதி இளவரசரின் பின்னணியை வெளிப்படையாக உணர்த்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சவுதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில், 'இது தவறான, ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டு' என கண்டனம் தெரிவித்துள்ளது. ஆரம்ப நாட்களில் கஷோகி குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறிய சவுதி அரசாங்கம், தற்போது கொலைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகக் கூறுகிறது. ஆனால், இளவரசர்தான் காரணம் என்பதை ஏற்க மறுக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com