முடிவுக்கு வரும் ட்ரம்ப்பின் ஆட்டம்.. வெளியான அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்.. குஷியில் எதிர்க்கட்சி!
அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை (House of Representatives) மற்றும் செனட் சபைக்கு (Senate) நேற்று இடைக்காலத் தேர்தல் நடைபெற்றது. பிரதிநிதிகள் சபையின் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் மற்றும் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர் பதவிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைக்காலத் தேர்தல் அதிபர் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் மீதான மக்களின் மதிப்பீடாகவும் (Referendum), அவரது அடுத்த 2 ஆண்டுகால சட்டத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளைத் தீர்மானிக்கும் காரணியாகவும் பார்க்கப்படுகின்றன.
நேற்று இரவு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், உடனடியாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
செனட் சபையின் 35 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போது வரை இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி 9 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில், 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அதேநேரம், ட்ரம்பின் குடியரசுக் கட்சி 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள நிலையில், 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இன்னும் பல்வேறு தொகுதிகளுக்கான முடிவுகள் வெளிவராத நிலையில், செனட் சபையின் பெரும்பான்மை, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வசம் வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இதன் மூலம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சட்டங்களுக்கு தடை விதிக்கவும், அவரது அரசின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் மீது விசாரணைகளை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு அதிகாரம் கிடைக்கும் என்பதால், இனி ட்ரம்ப்பால் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தேர்தல் முடிவுகள் ட்ரம்ப் அரசுக்கு பெரும் பின்னடைவாக மாறியுளது.
அதேபோல பிரதிநிதிகள் சபையில் 45 இடங்களில் ஜனநாயகக் கட்சியும், 21 இடங்களில் குடியரசுக் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் ஆளுநர்கள் தேர்தலில் 11 இடங்களில் ஜனநாயகக் கட்சியும் 8 இடங்களில் குடியரசுக் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த தேர்தல் முடிவுகள் ட்ரம்ப் அரசுக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

