பாகிஸ்தான் செல்வதை தவிர்த்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - காரணம் என்ன?
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தானுக்குச் செல்வதை தவிர்த்துள்ளார்.
அமெரிக்க அதிபர்கள் இந்தியா வருகை தரும் போதெல்லாம் அண்டை நாடானா பாகிஸ்தானுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். 1959ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் EISENHOWER, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமே பயணம் மேற்கொண்டார். 1969ஆம் ஆண்டு இந்தியா வருகை தந்தை அதிபர் ரிச்சர்ட் நிக்சன், பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தார். உடனே பாகிஸ்தானுக்கும் சென்று அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அதிபர் பில்கிளிண்டன் 2000ஆம் ஆண்டு இந்தியா வருகை தந்தார். அவரும் இந்திய பயணம் முடிந்து அடுத்ததாக பாகிஸ்தான் சென்றார். 2006 ஆம் ஆண்டு இந்தியா வருகை தந்த ஜார்ஜ் புஷ், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் சென்று அந்நாட்டு அதிபர் முஷாரஃப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்படி இந்தியா வருகையின் போது பாகிஸ்தானுக்கு செல்வதை அமெரிக்க அதிபர்கள் வழக்கமாக கொண்டிருந்த நிலையில் பராக் ஒபாமா இந்த ட்ரெண்டை மாற்றினார். 2010 மற்றும் 2015 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிற்கு வருகை தந்த ஒபாமா பாகிஸ்தானுக்கு செல்வதை தவிர்த்திருந்தார். பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்களுக்கு எதிராக எப்போதுமே குரல் கொடுத்து வந்த ஒபாமா பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என்றும் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடக்கூடாது என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.
இதுவே அவர் பாகிஸ்தானை புறக்கணிக்க காரணமாக சொல்லப்பட்டது. இருப்பினும் எப்படியாவது ஒபாமாவை பாகிஸ்தானுக்கு வரவழைக்க வேண்டும் என அப்போதைய நவாஸ் ஷெரிப் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் அவை தோல்வியில் முடிந்தன. அண்மையில் அதிபர் ட்ரம்பும், இம்ரான் கானும் தாவோஸில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காஷ்மீர் விவகாரத்தை முன் வைத்தார் இம்ரான் கான்.
இதனைக் கேட்ட ட்ரம்ப் இது தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய தயார் என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் பாகிஸ்தானுக்கு வருகை தருவார் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரும் கூறியிருந்தார். இந்தச் சூழ்நிலையில் ட்ரம்பின் இந்தியப் பயணம் குறித்த அறிவிப்பை மட்டுமே வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அவர் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.