’ஹார்முஸ் நீரிணை அல்ல.. இனி ட்ரம்ப் நீரிணை’ - அதிபர் ட்ரம்ப் சூசக பேச்சு!
ஈரான் உடனடியாக ட்ரம்ப் நீரிணையை திறக்கவேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சூசகமாக பேசியுள்ளார்.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் 4 வாரத்தை கடந்திருக்கும் சூழலில், மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. அதேசமயம், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள், 10 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தப்போவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், ஈரான் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுடன் எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தது.
டிரம்பின் கூற்றுக்கள் அப்பட்டமான பொய் என்றும், இது அமெரிக்காவின் பலவீனத்தையே காட்டுவதாகவும் ஈரான் விமர்சித்த நிலையில், ஈரான் மீது தரை வழித்தாக்குதலை நடத்த கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மேற்காசிய நாடுகளுக்கு அமெரிக்க அனுப்பவிருப்பதாக தகவல் வெளியானது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் 10 லட்சம் வீரர்களை தயார்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இப்படி போர் தொடர்வதற்கான சூழலை இரண்டு தரப்பும் தொடர்ந்து செய்துவரும் நிலையில், ஆனால் மீண்டும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை அல்ல ட்ரம்ப் நீரிணை..
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த வருங்கால முதலீட்டு திட்ட முன்னுரிமைக்கான உச்சி மாநாட்டில் பேசிய ட்ரம்ப், ஈரான் டிரம்ப் நீரிணையை திறக்க வேண்டும். மன்னிக்க வேண்டும், நான் ஹார்மூஸ் நீரிணையை கூறினேன். இது ஒரு பயங்கர தவறு. ட்ரம்ப் தவறுதலாக கூறி விட்டார் என பொய்யான செய்தி வெளிவரும். ஆனால் நான் தவறுதலாக எதுவும் கூறவில்லை. இதற்கு அதிக தூரமும் இல்லை என்று பேசினார்.
அவருடைய பேச்சின் அடிப்படையில் வருங்காலத்தில் ஹார்மூஸ் நீரிணைக்கு பதில், அது டிரம்ப் நீரிணை என பெயர் மாற்றப்படும் என்பதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றபிறகு, வாஷிங்டனின் கென்னடி கலை மையத்திற்கு "டிரம்ப்-கென்னடி மையம்" எனப் பெயர் மாற்றுவதற்கு முன்பும், இதேபோன்ற கிண்டலான கருத்துக்களையே தெரிவித்தார். மேலும் வாஷிங்டனில் உள்ள ஒரு அமைதி நிறுவனத்திற்கும் ட்ரம்ப் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

