“நிலா எங்களுக்குத்தான் சொந்தம்..” ட்ரம்பால் உலக நாடுகள் அதிருப்தி! அமெரிக்காவின் சூழ்ச்சி இதுதானா?
செய்தியாளர் - கார்த்திகேயன்
கடந்த 1967-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அன்று, சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் உலக நாடுகள் முன்னிலையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. விண்வெளியில் நடத்தப்படும் ஆய்வு, பயன்பாடு ஆகியவற்றை நிர்வகிப்பதற்காக சர்வதேச சட்டங்களின் அடிநாதமாக இந்த ஒப்பந்தம் இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, விண்வெளியை அனைத்து நாடுகளும் சுதந்திரமாக ஆராய்ச்சி செய்ய முடியும்.
மேலும், மனிதகுலம் அனைத்தின் நலனுக்காகவும் அந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும், நிலவு போன்ற துணைக் கோள்களையும், செவ்வாய், சனி போன்ற கோள்களையும், எந்தவொரு நாடும் சொந்தம் கொண்டாடக்கூடாது, விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தக் கூடாது, தங்களது விண்வெளி செயல்பாடுகளுக்கு அந்தந்த நாட்டின் அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள், இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நிலவுக்குச் சொந்தம் கொண்டாடி இருப்பது, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கோபத்தையும் பெற்றிருக்கிறது. அதாவது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ட்ரூத் சோசியல் மீடியாவில், பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். நிலவின் மையத்தில் அமெரிக்க கொடி இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து, ’நிலவு நம்முடையது’ என்று அந்தப் பதிவில், ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், ஹார்முஸ் நீரிணையும் அமெரிக்காவிற்குச் சொந்தம் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று, நேற்று மெக்சிகோ மாநிலத்தின் பெயரை ’நியூ அமெரிக்கா’ என்று மாற்றலாம் என்றும் ட்ரம்ப் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த நியூ மெக்சிகோ கவர்னர், அமெரிக்கா உருவாவவதற்கு முன்பே தங்களது மாநிலத்தின் பெயர் இருந்தது என்றும் பதிலடி கொடுத்தார்.
தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளைச் சொந்தம் கொண்டாடுவது, பெயர்களை மாற்றுவது குறித்து, பலரும் ட்ரம்பை கேலியாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், அவர் இவ்வாறு செய்வதற்குப் பின்னால், வலுவான அரசியல் ஆதாயம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. உயர்ந்துவரும் எரிபொருள் விலை போன்ற உள்நாட்டுப் பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே ட்ரம்ப் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. எனவே, காரண காரியத்துடன் ட்ரம்ப் மேற்கொள்ளும் இந்த முயற்சிகள், எந்த அளவுக்கு அவருக்கு பலனைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

