அலாஸ்கா | டிரம்ப் - புதின் 3 மணி நேரம் பேச்சு.. எந்த முடிவும் இல்லை.. ஆனாலும் இருவரும் ஹேப்பி!
ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக யுத்தம் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், உக்ரைன் ஒப்புக்கொண்ட போதிலும், ரஷ்யா தட்டிக் கழித்தது.
இதனிடையே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். அதன்படி இந்தியாவுக்கு 50 சதவிகித வரியையும் விதித்தார். உக்ரைன் போர், வரி விவகாரத்திற்கு மத்தியில், அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்து இருந்தார். ட்ரம்ப் -புடின் சந்திப்பின் முக்கிய நோக்கம் உக்ரைன் யுத்தத்தை நிறுத்துவதுதான் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில், அலாஸ்காவில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சந்திப்பிற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் தங்கள் முதல் பொதுக் கருத்துக்களை வெளியிட்டனர். இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் மற்றும் உக்ரைனில் உள்ள மோதல்கள் குறித்து நம்பிக்கை மற்றும் நிதானத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், பத்திரிகையாளர் சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை.
கூட்டு செய்தியாளர் சந்திப்பை புதின் தொடங்கி வைத்தது வித்தியாசமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் அமெரிக்க அதிபர்கள் பொதுவாக வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்கும்போது முதலில் பேசுவார்கள். இந்த சந்திப்பு தாமதமானது குறித்து புதின் பேசினார். மேலும், டிரம்புடனான பேச்சுவார்த்தைகள் "ஆக்கபூர்வமானவை" என்று கூறி, அழைப்புக்கு நன்றி தெரிவித்தார். ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பகிரப்பட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக அலாஸ்கா ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது என்றும் புதின் கூறினார்.
டிரம்ப் போர் நிறுத்தம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. "There's no deal until there's a deal" எனவும் குறிப்பிட்டு இருக்கிறார் டிரம்ப். மேலும், நேட்டோ மற்றும் ஜெலன்ஸ்கியை விரைவில் சந்தித்து பேசுவதாக டிரம்ப் கூறியிருக்கிறார். இதனால், அந்த சந்திப்புக்கு பிறகு உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.