பாலியல் வழக்கிலிருந்து தப்பிக்க நூதன முயற்சி.. டாட்டூ மூலம் சிக்கிய குற்றவாளி!
தன் மரணத்தையே போலியாக அரங்கேற்றி, பாலியல் வழக்கிலிருந்து தப்ப முயன்ற ஒரு குற்றவாளியின் கதை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 38 வயதான நிக்கோலஸ் ரோஸ்ஸி, 2008-ல் தனது அப்போதைய காதலியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து தப்பிக்கத் திட்டமிட்டார். இதற்காக, தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக நம்ப வைக்க போலியான இரங்கல் செய்தியை பரவ விட்டுள்ளார். பின்னர், அலாவெர்டியன் என்ற புதிய பெயருடன் ஸ்காட்லாந்துக்குத் தப்பிச் சென்றார். ரோஸ்ஸியின் இந்த நாடகம் 2021இல் ஒரு எதிர்பாராத நிகழ்வால் வெளிச்சத்துக்கு வந்தது. கொரோனா தொற்று காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அவரது உடலிலுள்ள டாட்டூகள் மூலம் இன்டர்போல் காவலர்கள் அவரை அடையாளம் கண்டனர். இதையடுத்து, அவர் 2024 ஜனவரியில் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். அதன் பிறகு அவர் மேல்முறையீடு செய்தார்.அப்போது தான் தவறான அடையாளத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும், உண்மையில் அவர் ஆர்தர் நைட் என்ற ஐரிஷ் அனாதை என்றும் கூறினார். மேலும் மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்தபோது தான் பச்சை குத்தப்பட்டதாகவும், தனது கைரேகைகள் மாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால் அவரது மேல்முறையீடு வழக்கு நிராகரிக்கப்பட்டது. ஒரு நீதிபதி அவர் "நேர்மையற்றவர், ஏமாற்றுக்காரர், அதே அளவு தப்பிக்கும் மற்றும் சூழ்ச்சி செய்பவர்" என்று கண்டறிந்து, அவரது நாடுகடத்தலை அங்கீகரித்தார்.
தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சால்ட் லேக் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் சிம் கில், விசாரணையின் போது பாதிக்கப்பட்டவரான ரோஸி காதலியின் தைரியத்தைப் பாராட்டினார்."அவளுடைய தைரியம், முன்னோக்கி வருவதில் அவளது உறுதிப்பாடு... அதுதான் இந்த வழக்கின் திறவுகோல்" என்று அவர் கூறினார். தற்போது பாலியல் வழக்கில் ரோஸ்ஸி குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு ஐந்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.