
காஸா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. வான்வெளி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கும் என கடந்த வாரமே எதிர்பார்க்கப்பட்டது.
காஸாவை ஓட்டிய பகுதிகளில் பீரங்கிகள் உள்ளிட்ட போர் தளவாடங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் துருப்புகளும் தயார் நிலையில் உள்ளன. ஆனால் இன்னும் அப்பகுதியில் போர் தொடங்காததற்கு அமெரிக்கா அளித்த அறிவுறுத்தலே காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.
ஹமாஸ் பிடித்து வைத்துள்ள 212 பிணைக்கைதிகளை முழுமையாக மீட்க அவகாசம் வேண்டும் என்பதாலும் காஸா பகுதிக்குள் நிவாரண உதவிகள் முழுமையாக அனுப்பப்பட வேண்டும் என்பதாலும் தரை வழி தாக்குதலை தாமதப்படுத்துமாறு இஸ்ரேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க அரசின் உயரதிகாரிகள் சிலர் தெரிவித்துள்னர்.
காஸாவில் தரைவழி தாக்குதல் தொடங்கினால் ஈரான் ஆதரவு போர்க்குழுக்கள் முழு வீச்சில் சண்டையில் இறங்கும் என்பதால் அவற்றை சமாளிக்க அமெரிக்க படைகள் தயாராக அவகாசம் தேவைப்படுவதும் இதற்கு ஒரு காரணம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போர் நகர்வுகள் குறித்து அமெரிக்க அதிபர் பைடனுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆலோசனைகளை பெறுவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். தரைவழித்தாக்குதலுக்கு ஏதுவாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஏற்கெனவே ஆயுதங்களை அனுப்பியுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் 2 விமானந்தாங்கி கப்பல்களையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் தரைவழி தாக்குதல் தொடங்கினால் அது 3 மாதம் வரை கூட நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் ஆனால் அதற்கு பின் ஹமாஸ் என்ற ஒரு அமைப்பே இருக்காது என்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் (YOAV GALLENT) தெரிவித்துள்ளார்.