விண்வெளியில் சீனா செய்த மர்ம வேலை.. அச்சத்தில் தூக்கத்தைத் தொலைத்து நிற்கும் அமெரிக்கா!
செய்தியாளர் - M.மீரா
சீனாவின் ரகசிய விண்வெளி விமானமான ‘ஷென்லாங்’ (Shenlong) குறித்து இதுவரை இல்லாத அளவுக்கு தெளிவான புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் மூலம் சீனாவின் விண்வெளி விமானம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (DIA) அதன் Challenges to Security in Space 2026 என்ற புதிய அறிக்கையில், சீனாவின் அதிரகசிய விண்கலமான 'ஷென்லாங்' (Shenlong) space shipஇன் தெளிவான செயற்கைக்கோள் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் மேக்சார் டெக்னாலஜிஸ் (Maxar Technologies) செயற்கைக்கோள் மூலம் விண்வெளியில் எடுக்கப்பட்ட இந்த உயர் ரகசியப் படம், தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது.
சீனாவின் ஷென்லாங்' (Shenlong) spaceship - அமெரிக்க விண்வெளிப் படை இயக்கும் X-37B ரோபோடிக் விண்கலத்தைப் போன்று அச்சுஅசலாக இருக்கிறது. சிறிய இறக்கைகள், இரட்டைச் செங்குத்து வால்களையும் இது கொண்டுள்ளது
இதன் பின்புறத்தில் ஆற்றல் தயாரிக்கும் சூரிய ஆற்றல் தகடுகளும் (Solar panels), விண்வெளிப் பொருட்களைக் கையாள்வதற்கான திறக்கக்கூடிய சரக்கு அறையும் (Payload bay) இருப்பது படத்தில் தெளிவாகத் தெரிகிறது.
இந்த விண்கலம் விண்வெளிப் பாதையில் இயங்கும்போது ஏதோ ஒரு மர்மமான பொருளை விண்வெளியில் விடுவிப்பதும், அதனுடன் தொடர்புகொள்வதும் கண்டறியப்பட்டுள்ளது. இது செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் அல்லது அழிக்கும் தொழில்நுட்பமாக இருக்கலாம் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.
ராக்கெட் மூலம் ஏவப்பட்டு, தனது பணியை முடித்தபின் சாதாரண விமானம்போல ஓடுபாதையில் தரை இறங்கும் திறன் கொண்டது.
சீனா தனது இந்த விண்வெளிப் திட்டம் குறித்த விபரங்களை ரகசியமாக வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த உளவுத்துறை அறிக்கை விண்வெளியில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் தீவிர ராணுவப் போட்டியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

