ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு: கழுத்தை நெரித்த காவல் அதிகாரி டெரக் குற்றவாளி என தீர்ப்பு

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு: கழுத்தை நெரித்த காவல் அதிகாரி டெரக் குற்றவாளி என தீர்ப்பு
ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு: கழுத்தை நெரித்த காவல் அதிகாரி டெரக் குற்றவாளி என தீர்ப்பு

ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் டெரிக் சாவினுக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனிடையே ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சு விட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதனைத்தொடர்ந்து ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் டெரிக் சாவின் உள்பட 4 போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது. அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com