அதானி வழக்கை தூக்கி எறிந்த நீதிமன்றம்.. ட்ரம்ப் கொடுத்த அதிரடி! திடீரென நடந்தது என்ன?
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
அதானி, இந்திய அதிகாரிகளுக்கு 26.5 கோடி அமெரிக்க டாலர் லஞ்சம் வழங்கி, லாபகரமான சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்கான திட்டத்தில் ஈடுபட்டதாக 2024ஆம் ஆண்டு அமெரிக்காவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் மே மாதம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், புரூக்ளின் ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி நிக்கோலஸ் கராஃபிஸ் அதற்கு முறையாக ஒப்புதல் அளித்துள்ளார்.
அதானியின் வழக்கறிஞர் ராபர்ட் கியூஃப்ரா, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞராகவும் உள்ளார். ஏப்ரல் மாதம் நீதித்துறை அதிகாரிகளிடம் அவர், அதானி மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டால், அமெரிக்க பொருளாதாரத்தில் 1,000 கோடி டாலர் முதலீடு செய்ய அவர் தயாராக இருப்பதாக தெரிவித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், இந்த முதலீட்டு உறுதிமொழி வழக்கை கைவிடுவதற்கான காரணிகளில் இதுவும் ஒன்றா என நீதிபதி முன்பு கேள்வி எழுப்பியிருந்தார். எனினும், வழக்கை கைவிட அரசு எடுத்த முடிவில் இந்த முதலீட்டு உறுதிமொழி இடம்பெறவில்லை என அவர் முடிவு செய்தார்.
அதேவேளையில், ட்ரம்ப் நியமித்த துணை இணை அட்டர்னி ஜெனரல் ட்ரென்ட் மெக்காட்டர் வழக்கைத் தள்ளுபடி செய்ய மேற்கொண்ட நடவடிக்கையை நீதிபதி கடுமையாக விமர்சித்தார். இந்த முடிவு, வழக்கை விசாரித்த FBI மற்றும் SEC அதிகாரிகள் அல்லது வழக்கைத் தொடர்ந்த அரசு வழக்கறிஞர்களின் கருத்துகளைப் பெறாமல், அதானியின் தரப்பு வழக்கறிஞர்களுடன் இணைந்து எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது என்றும், இது மிகவும் அரிதான நடைமுறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம் துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், சிமென்ட் ஆலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறது.
ட்ரம்ப்பின் ஆதரவாளராக சமூக வலைதளங்களில் வெளிப்படையாகச் செயல்பட்டு வரும் அதானி, பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய கூட்டாளியாகவும் கருதப்படுகிறார். குஜராத்தைச் சேர்ந்த அதானி, சமீப ஆண்டுகளில் நிறுவன மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் பங்குச்சந்தை சரிவு உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். அமெரிக்க நீதிமன்றத்தின் முடிவை வரவேற்ற அதானி, “உண்மை, நியாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான எங்கள் நம்பிக்கை எப்போதும் மாறவில்லை” என சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

