ஈரானின் ஏவுகணைத் திறன் முடக்கம் | அமெரிக்கா சொல்வதில் உண்மை என்ன?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் ஏவுகணைத் திறன் குறைந்ததாக கூறினாலும், ஈரான் இன்னும் பல ஏவுகணைகளை அண்டை நாடுகள் மீது ஏவுகிறது. இதனால், ஈரானின் ஏவுகணைத் திறன் முற்றிலும் அழிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவும் ஈரானின் திறனைக் கடுமையாகக் குறைத்துள்ளன. ஆனால் குறிப்பிடத்தக்க சேதத்தை விளைவிக்கும் அளவுக்கு திறன் கொண்ட ஆயுதங்களை, செயல்திட்டத்தை ஈரான் தன்னகத்தே கொண்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திறன் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. அந்நாட்டின் கடற்படை, போரிடும் திறன் எல்லாவற்றையும் நாங்கள் அழித்துவிட்டோம் என்றும் நாங்கள் ஈரானின் மொத்த வான்வழியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளோம் என்றும் பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடங்கிய ஆபரேஷன் எபிக் ஃபியூரி மிகப்பெரிய பலன்களைத் தந்து கொண்டிருக்கிறது என்றும் சனிக்கிழமை வெள்ளை மாளிகை கூறியது.
ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்கப் படைகள் ஈரானின் ஆளில்லா விமான உற்பத்தித் திறனை முற்றிலுமாக அழித்துவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
இருப்பினும், திங்கள்கிழமை பிற்பகலில், ஈரானிலிருந்து கத்தார் மீது தொடர்ச்சியாக ஏவப்பட்ட ஏவுகணைகளில் சிலவற்றை இடைமறித்ததாக கத்தார் அறிவித்தது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் எச்சரிக்கை விடுத்தன. அபுதாபியில் ஒரு கார் மீது ஏவுகணை ஒன்று விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். அப்படியானால், ஈரானின் ஏவுகணைத் திறன்கள் கடுமையாகக் குறைந்துவிட்டனவா? மேலும், அது எப்படி இன்னும் தனது அண்டை நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது எவுகணைகளை ஏவுகிறது?
ஈரான் இப்போது குறைவான ஏவுகணைகளையே ஏவுகிறதா?
உண்மையில், போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா நாடுகள், இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தின் பிற நாடுகளை நோக்கி ஈரான் ஏவிய பதிலடி ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. உதாரணமாக, மோதலின் முதல் 24 மணி நேரத்தில், ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது 167 பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளையும், 541 ஆளில்லா விமானங்களையும் ஏவியிருந்தது.
இதற்கு மாறாக, அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கைகளின் அடிப்படையில், மோதலின் 15-வது நாளில் அது 4 ஏவுகணைகளையும் 6 ஆளில்லா விமானங்களையும் ஏவியிருந்தது. இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களும் குறைந்துள்ளன; முதல் 2 நாட்களில் கிட்டத்தட்ட 100 ஏவுகணைகளாக இருந்த எண்ணிக்கை, கடந்த சில நாட்களில் ஒற்றை இலக்க எண்ணாகக் குறைந்துள்ளது என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது. சண்டை தொடங்கிய முதல் நாளுடன் ஒப்பிடுகையில் ஏவுகணை ஏவுதல்கள் 90 சதவீதமும், ஆளில்லா விமானத் தாக்குதல்கள் 86 சதவீதமும் குறைந்துள்ளதாக கடந்த வாரம் பென்டகன் தெரிவித்தது.
ஈரானின் ஏவுகணை ஆயுதக் கிடங்கு எவ்வளவு பெரியது? அது எவ்வளவு சேதமடைந்துள்ளது ?
2022ஆம் ஆண்டில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவலகம், ஈரான் இப்பகுதியில் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டுள்ளது என்று மதிப்பிட்டது. எத்தனை ஏவுகணைகள் உள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இல்லை என்றாலும், இஸ்ரேலிய உளவுத்துறை அறிக்கைகள் அது சுமார் 3,000 ஏவுகணைகளைக் கணக்கிட்டதாகக் கூறுகின்றன, கடந்த ஜூன் மாதம் 12 நாள் போருக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 2,500 ஆகக் குறைந்துள்ளது.
ஈரானின் ஏவுகணை ஏவுதளங்களைக் கண்டறிவதே அமெரிக்க-இஸ்ரேல் வியூகத்தின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. ஒரு மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரியின் கூற்றுப்படி, மதிப்பிடப்பட்ட 410 முதல் 440 ஏவுகணை ஏவுதளங்களில், இஸ்ரேல் 290 ஏவுதளங்களைச் செயலிழக்கச் செய்துள்ளது.
ஆனால், ஈரான் ஒரு பரந்த நாடு. தரைப்படைகள் இல்லாமல் ஈரானின் ஏவுகணைத் திறனை முழுமையாக ஒழிப்பது கடினமாக இருக்கும் என்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டேவிட் டெஸ் ரோச்சஸ் கூறியுள்ளார்
ஈரானின் வியூகம் என்ன?
ஈரான் குறித்த ஜெர்மனியின் சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான நிறுவனத்தின் (SWB) ஆய்வாளரும் நிபுணருமான ஹமித்ரெஸா அஸிஸியின் கூற்றுப்படி, ஈரானிடம் உள்ள ஏவுகணைகள் தீர்ந்துபோவதற்கு முன்பே, வளைகுடா நாடுகளும் இஸ்ரேலும் தங்களின் தற்காப்புத் திறன்களை இழந்துவிடக்கூடும் என்பதே தெஹ்ரானின் மையக் கணக்கீடாகும்.
ஈரானில் இருந்து ஏவப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அது சீராக நீடிப்பதைச் சுட்டிக்காட்டி, தொடர்ச்சியான சிறிய அளவிலான நடவடிக்கைகள் மூலம் மற்ற தரப்பை படிப்படியாகச் சோர்வடையச் செய்யும் , பலவீனப்படுத்தும் செயல்முறையை ஈரான் கையாளுகிறது என்று அவர் கூறினார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் முக்கிய ஏவுகணைத் தளங்களையும் அழிப்பதில் வெற்றி பெற்றிருந்தாலும், ஈரானியர்கள் நகரும் ஏவுகணை (mobile) ஏவுதளங்களையே அதிகம் நம்பியுள்ளனர்" என்று அஜிஜி கூறினார்.
”நீங்கள் எத்தனை ஆளில்லா விமானங்களை ஏவுகிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. நீங்கள் எத்தகையான அச்சுறுத்தலை எதிரிக்கு தருகிறீர்கள் என்பதே முக்கியம். பாதுகாப்பு உணர்வைச் சிதைக்க, ஒரு வெற்றிகரமான ஆளில்லா விமானம் போதும்” என்று தோஹா பட்டதாரி கல்வி நிறுவனத்தின் முக்கிய பாதுகாப்பு ஆய்வுகள் துறை உதவிப் பேராசிரியர் முஹனத் செலூம் அல் ஜசீராவிடம் கூறியுள்ளார் .
மலிவான திறமையான ஆளில்லா விமானங்களைத் தயாரிப்பதில் ஈரானின் சிறப்பு
மலிவான மற்றும் அதேசமயம் திறமையான ஆளில்லா விமானங்களைத் தயாரிப்பதில் ஈரானுக்கு நீண்டகால அனுபவம் உண்டு. ஷாஹெட் 136-ஐ ஒப்பீட்டளவில் எளிமையான தொழிற்சாலைகளில் விரைவாகவும் அதிக எண்ணிக்கையிலும் தயாரிக்க முடியும். மேலும், அவற்றில் பலவற்றை ஒரே நேரத்தில் ஏவி, பாதுகாப்பு அரண்களை நிலைகுலையச் செய்ய முடியும். மணிக்கு வெறும் 185 கி.மீ (115 மைல்) வேகத்தில் செல்லக்கூடிய ஷாஹெட்களை ஹெலிகாப்டர்கள் மூலமே சுட்டு வீழ்த்திவிட முடியும். இருப்பினும், பல ஷாஹெட்கள் அமெரிக்க மற்றும் வளைகுடா நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறிச் சென்றுள்ளன.
திங்களன்று மட்டும், ஈரானின் தாக்குதலால் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக தடைபட்டது. மேலும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதம் கொண்டு செல்லப்படும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியில், கப்பல்கள் மீதான தாக்குதல்கள் குறைவாக இருந்தபோதிலும், தாக்கப்படுமோ என்ற அச்சத்தில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் முடங்கியுள்ளன.
இயற்கை எரிவாயுவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளரான கத்தார், தனது உற்பத்தியைத் தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளது; பஹ்ரைனின் அரசு எண்ணெய் நிறுவனம் தனது ஏற்றுமதிகளுக்கு 'ஃபோர்ஸ் மஜூர்' (force majeure) நிலையை அறிவித்துள்ளது; மேலும், ஈராக்கின் முக்கிய தெற்கு எண்ணெய் வயல்களில் இருந்து எண்ணெய் உற்பத்தி 70 சதவீதம் சரிந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற இராணுவ ரீதியாக உயர்ந்த சக்திகளுக்கு எதிராக பலவீனமான தரப்பான ஈரான், மரபுசாரா போர் முறைகளைக் கையாண்டு, முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து எதிரிக்குப் பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி, அதைச் சோர்வடையச் செய்கிறது.
ஈரான் உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்திக் கொண்டே இருந்தால், "அமெரிக்கா ஈரானில் குண்டுகளை வீசுவதைவிட சமமான அல்லது அதிக சேதத்தை ஏற்படுத்தும்" என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் மத்திய கிழக்கு ஆய்வுகள் பேராசிரியர் வலி நாசர் கூறினார்.

