ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த பி-1பி ரக போர் விமானங்கள் வட கொரியாவிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அந்நாட்டின் மேல் பறந்தன.
ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வட கொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள ராணுவ தளத்தை தாக்க குறி வைத்து எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக சர்வதேச போர் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த இரு பி-1பி ரக போர் விமானங்கள் நேற்று வட கொரியா கடல் எல்லைக்கு மேலே வட்டமிட்டு பறந்ததாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.