ஒரு புறம் நட்பு, மறுபுறம் ஆயுதம் : அம்பலமான அமெரிக்காவின் இரட்டை வேடம்.. கடும் கோபத்தில் ரஷ்யா!
கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கி பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வாரி வழங்கின. அதோடு, ரஷ்யாவின் முக்கிய வருவாய் ஆதாரமான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதிக்கு தடை விதித்தன. இதனால், ரஷ்யா பெரும் இழப்புகளைச் சந்தித்தது.
ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் உக்ரைன் - அமெரிக்கா உறவில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், உக்ரைனுக்கான அமெரிக்காவின் ராணுவ உதவிகளையும் குறைத்தார். அதோடு ரஷ்ய அதிபர் புதினை ட்ரம்ப் அமெரிக்காவுக்கு வரவழைத்து சந்தித்து பேசினார்.
இதனிடையே, அமெரிக்கா - ஈரான் போர் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், அமெரிக்காவில் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த வாரம் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை குறைத்துக்கொண்டு டிரம்ப், ரஷ்யா உலக நாடுகளுக்கு டீசல் விற்பனை செய்ய விதித்திருந்த தடைகளை திரும்பப்பெற்றார். அதோடு, ரஷ்யாவிடமிருந்து நேரடியாக டீசல் பெரும் ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளார்.
இப்படி ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட அதே கையோடு உக்ரைனுக்கு 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவது போரை முடிவுக்குக் கொண்டுவர உதவாது என்றும், இது மோதலை மேலும் தீவிரப்படுத்தி நீட்டிக்கவேச் செய்யும் என்றும் என்று ரஷ்யா தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் ரஷ்யாவுடன் டீசல் ஒப்பந்தம் போட்ட சில நாட்களில் அந்த நாட்டுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

