வடகொரியாவுடன் போர் இல்லை: அமெரிக்க ராணுவ அமைச்சர் தகவல்

வடகொரியாவுடன் போர் இல்லை: அமெரிக்க ராணுவ அமைச்சர் தகவல்

வடகொரியாவுடன் போர் இல்லை: அமெரிக்க ராணுவ அமைச்சர் தகவல்
Published on

வடகொரியாவுடன் போர் இல்லை என அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள், அமெரிக்காவுக்கு பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்க நகரங்களை குறி வைத்து தாக்குகிற ஆற்றல் வாய்ந்த 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதித்தது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதன் காரணமாக அமெரிக்காவின் முயற்சியால், வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்துகிற வகையில், அந்த நாட்டின் நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, ஈயம், மீன், கடல் உணவுகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. இந்த புதிய பொருளாதார தடையால் அந்த நாட்டுக்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி வருமானம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த வடகொரியா மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அதிகார எல்லைக்குள் வருகிற குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தது. இதற்கான திட்டத்தை அந்த நாட்டின் அரசு தொலைகாட்சி வரைபடங்களுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்

“அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா செயல்பட்டால் மிகுந்த பதற்றத்தை சந்திக்க வேண்டியது வரும். வடகொரியாவுக்கு சிக்கல் ஏற்படும்” என எச்சரித்தார். இதனால் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் இதில் திடீர் திருப்பமும் ஏற்பட்டுள்ளது. வடகொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்காது என்பதை சூசகமாக அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கலிபோர்னியாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் ராணுவ அமைச்சர் என்ற வகையில், வடகொரியாவுடன் மோதலுக்கு தயார் ஆவதுதான் என் வேலை. ஆனால், வெளியறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி ஆகிய இருவரும் ராஜ்ய ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது” என்றார். மேலும் “போரின் சோகம், ஏற்கனவே அறியப்பட்டுள்ளது. அது பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு அப்பால் அதன் குணாதிசயங்கள் குறித்து விளக்கத் தேவையில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் பதற்றம் குறைக்கப்படும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com