அமெரிக்காவில் வீசிய நீல சுனாமி.. சரியும் ஏஐ முதலீடு.. காணாமல் போன 2.5 டிரில்லியன்!
அமெரிக்காவில் வீசிய நீல சுனாமியால், 2.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் முதலீடுகள் அமெரிக்க சந்தையில் இருந்து காணாமல் போயிருப்பது பலரையும் கலக்கமடைய வைத்திருக்கிறது.
Super Intelligence என அண்மையில் செயற்கை நுண்ணறிவுக்கு பெயர் சூட்டினார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஏஐ-ன் அதீத வளர்ச்சியும், கட்டுப்படுத்தப்படாத செயல்பாடுகளும் மனிதர்களுக்கு ஆபத்தாகலாம் என நிறுவன சி.இ.ஓ.க்களே எச்சரிக்கை விடுத்தபோதும், அதுகுறித்து கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப், ஏஐ முதலீடுகளுக்கும், அதன் அபார வளர்ச்சிக்கும் ஏகபோக அனுமதியை வழங்கிவந்தார். செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்புத் திட்டங்கள், நிர்வாக உத்தரவுகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் உடனடி அனுமதி கொடுத்துவந்த நிலையில், அவர்களுக்கான கட்டுப்பாடுகளும் பல இடங்களில் தளர்த்தப்பட்டதாக தெரிகிறது. இதனால், முதலீட்டாளர்கள் பலரும் ஏஐ-ல் பலவாறாக முதலீடு செய்துவந்தனர்.
இதற்கிடையில், புறநகர்ப் பகுதிகளில் அமைக்கப்படும் ஏஐ டேடா சென்டர்களால் மக்கள் நேரடி பாதிப்புகளை சந்திக்கத் தொடங்கினர். டேட்டா சென்டர்களைக் குளிர்விக்க கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டதால், பலரது வீடுகளிலும் தண்ணீர் பற்றாகுறை ஏற்பட்டது. சில வீடுகளில், கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகமும் அல்லது முற்றிலும் தண்ணீர் விநியோகிக்கப்படாத சூழலும் உருவானது. தீவிர வலதுசாரி ஆதரவாளரான ட்ரம்ப், இப்படி நிறுவனங்கள் நலனை கருத்தில்கொண்டு வழங்கிய அனுமதியால்தான் இப்படியான நிலை ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன.
இந்நிலையில், அமெரிக்காவில் நடந்துமுடிந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி எதிர்பாராத அளவில் அபார வெற்றி பெற்றது. இதனை அந்நாட்டு ஊடகங்கள் 'நீல சுனாமி' என வருணிக்கின்றன. இந்த நீல சுனாமியின் தாக்கத்தால், அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக் குறியீட்டில் ஒரே நாளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 2.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகள் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க சந்தையில் நாஸ்டாக் 100 குறியீடு சுமார் 6.4% சரிந்துள்ளது. 2025-க்குப் பிறகு ஏற்பட்ட மிக ஆழமான இழப்பு இது என தெரிவித்திருக்கிறது ராய்ட்டர்ஸ் நிறுவனம். ஏஐ தயாரிப்பில் முன்னணியில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களின் பங்குகளும் இப்படி சரிவைக் கண்டுள்ளன. அதன்படி, Nvidia 9%, AMD 17%, அமேசான், Alphabet, மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தப் போகும் ஜனநாயகக் கட்சியால், திட்டங்களுக்கு எளிதில் அனுமதி கிடைக்காது என்ற சந்தேகத்திலும், உடனடி லாபம் கிடைக்காது என்ற முடிவிலும் முதலீட்டாளர்கள் பின்வாங்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. முதலீடு சரிவதால் ஏஐ துறையின் அதிவேகம், மிதவேகத்துக்கு மாற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர் நிபுணர்கள்.

