சொந்த நாட்டு மக்களையே கொன்ற மியான்மர் ராணுவம்.. ஐநா அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!!
மியான்மரில் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆங் சான் சூச்சி தலைமையிலான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து அந்நாட்டு ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அன்று தொடங்கிய உள்நாட்டு மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நாட்டின் பல பகுதிகளில் ராணுவத்துக்கும் ஜனநாயக ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வந்தன.
தொடர்ந்து, 5 ஆண்டு ராணுவ ஆட்சிக்குப் பின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு ராணுவம் தேர்தலை அறிவித்த நிலையில், இந்தாண்டு ஜனவரி மாதம் மியான்மர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், ராணுவ ஆதரவு கட்சிகள் சுலபமாக வெற்றி பெற்ற நிலையில், மியான்மரில் மீண்டும் ராணுவத்தின் செல்வாக்கு கொண்ட ஆட்சியே தொடரும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு ராணுவப் புரட்சிக்கு தலைமை வகித்த ஆங் லாயிங் தற்போது அந்நாட்டின் அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்தசூழலில், ஐநா உரிமைகள் அலுவலகம் ராணுவத்தின் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற மியான்மர் தேர்தலை ஆரம்பம் முதலே கடுமையாக விமர்சித்து வந்தது.
இந்தநிலையில், மியான்மர் இராணுவம் தேர்தல்கள் நடத்தப்படும் என அறிவித்த கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் முதல், இந்தாண்டு ஜனவரி மாத இறுதியில் வாக்குப்பதிவு காலம் முடிவடைந்தது வரையிலான காலகட்டத்தில், 700க்கும் அதிகமான தங்களது நாட்டு பொதுமக்களையே மியான்மர் ராணுவம் கொன்றுள்ளதாக ஐநா சபை தற்போது அதிர்ச்சிகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐநா மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையின்படி, மியான்மரில் தேர்தல் நடைபெற்ற 6 மாத காலத்தில், தனது ஆட்சிப் பிடியை வலுப்படுத்தவும், கிளர்ச்சிப் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீண்டும் கைப்பற்றவும் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில், 700க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் இவர்களில் 224 பெண்களும், 153 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வான்வழித் தாக்குதல்கள், ட்ரோன் தாக்குதல்களே இந்த உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணமாக இருந்ததாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மக்கள் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதிலளித்த ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்தாசனி, 702 பேர் கொல்லப்பட்டதற்கு மியான்மர் ராணுவமே பொறுப்பு. இதனால், மற்ற ஆயுதக் குழுக்களால் மக்கள் பலியாகவில்லை என்று அர்த்தமில்லை. இந்த அறிக்கை எங்களுக்குக் கிடைத்த நம்பத்தகுந்த தரவுகளை மட்டுமே இது முழுமையான புள்ளி விவரம் அல்ல என தெரிவித்திருக்கிறார்.

