\
UN Report: 25 Women and Girls Killed Daily in Wars
WarReuters

பெரும் போராட்டக்களத்தில் உலகம்.. அதிகம் பாதிக்கப்படும் பெண்கள், சிறுமிகள்.. ஐநா அறிக்கை!!

உலகம் முழுவதும் அதிகாரத்திற்காக நடைபெற்று வரும் போர்களில், ஒவ்வொரு நாளும் குறைந்தது 25 பெண்களும் சிறுமிகளும் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது.
Published on: 

ஈரான் - அமெரிக்கப் போர், உக்ரைன் - ரஷ்யா மோதல், இஸ்ரேல் - பாலஸ்தீன் மோதல் உட்பட சர்வதேச உலகம் தற்காலத்தில் பெரும் போர்களையும், பாகிஸ்தான் - பலுசிஸ்தான், ஏமன் - ஹவுதி உள்ளிட்ட உள் நாட்டு மோதல்களையும் சந்தித்து வருகிறது. 1945-ம் ஆண்டு அதாவது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, அதிக எண்ணிக்கையிலான ஆயுத மோதல்கள நடக்கும் பெரும் போராட்டக்கலத்தில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தச்சூழலில் தான், ஐ.நா. பொதுச்செயலாளரின் 2026ஆம் ஆண்டுக்கான பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (Women, Peace and Security - WPS) அறிக்கை சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடைபெற்ற ஆயுத மோதல்களில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் இவர்களில் நான்கில் ஒருவர் பெண்கள் அல்லது சிறுமிகள் எனவும் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, போரில் கொல்லப்படும் பொதுமக்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் விகிதம் 2 மடங்காக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UNO
UNOReuters

அதேசமயம், இந்தப் போரின் பாதிப்பு உயிரிழப்புகளுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. பாலியல் வன்கொடுமை, வறுமை, இடப்பெயர்வு, மருத்துவ வசதிகள் கிடைக்காமை எனப் பெண்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, போர்ச்சூழலில் அதிக அச்சத்தை திணிக்கும் விதமாகவும், போர் உத்தியின் ஒரு முறையாகவும் ஆண் குற்றவாளிகளால் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, போர் சூழலில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

UN Report: 25 Women and Girls Killed Daily in Wars
கண்ணிவெடியில் சிக்கிய 3 கப்பல்கள்? ஈரான் அறிவித்த முக்கிய முடிவு!!

மேலும், உலகம் முழுவதும் சுமார் 75 கோடி பெண்களும் சிறுமிகளும் தற்போது போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் 4 கோடி அதிகமாகும். 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையும் இதுவே எனவும் இந்த அறிக்கை கவலை தெரிவிக்கிறது.

மேலும், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் சுமார் 17 கோடி பெண்களும், சிறுமிகளும் ஒரு நாளைக்கு 3 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழும் தீவிர வறுமை நிலையிலும் இருக்கின்றனர். மேலும், போர் பாதித்த நாடுகளில் பெண்கள், ஆண்களைக் காட்டிலும் 5 மடங்கு அதிக நேரத்தை ஊதியமில்லாத வீட்டு வேலைகளிலும் குடும்பப் பராமரிப்பிலும் செலவிடுகின்றனர் எனவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

War
WarReuters

அதேசமயம், இத்தனை பாதிப்புகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்பதும் கவலைக்குரியதாக உள்ளது. 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடைபெற்ற 57 அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில், பெண்களின் பங்கு வெறும் 5 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது. இது 2024ஆம் ஆண்டில் 7 சதவீதமாக இருந்தது.

மறுபுறம், உலக நாடுகளின் ராணுவச் செலவினம் 2025ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் 2.9 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதேவேளையில், போர் பாதித்த பகுதிகளில் செயல்படும் பெண்கள் அமைப்புகளில் 40 சதவீதம் நிதிப் பற்றாக்குறை காரணமாக அடுத்த ஓராண்டுக்குள் தங்களது செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தச்சூழலில் தான், போரில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும், பெண்கள் தலைமையிலான அமைதிப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கை குறித்துப் பேசியுள்ள, ஐநா சபையின் துணை நிர்வாக இயக்குநர் நியாராட்சாயி கும்போன்ஸ்வாண்டா (Nyaradzayi Gumbonzvanda) பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் போர் என்பது மேலும் ஆபத்தானதாக மாறி வருகிறது. உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது எனக் கவலை தெரிவித்துள்ளார்.

UN Report: 25 Women and Girls Killed Daily in Wars
பேசுபொருளாகும் சட்ட மேலவைத் தேர்தல்.. அறிந்துகொள்ள வேண்டியது என்ன?