பயங்கரவாத பட்டியலில் இருந்து ஹபீஸ் சயித் பெயரை நீக்க ஐ.நா மறுப்பு

பயங்கரவாத பட்டியலில் இருந்து ஹபீஸ் சயித் பெயரை நீக்க ஐ.நா மறுப்பு
பயங்கரவாத பட்டியலில் இருந்து ஹபீஸ் சயித் பெயரை நீக்க ஐ.நா மறுப்பு

மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயித் பெயரை, சர்வதேச பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க ஐ.நா மறுத்துவிட்டது. 

புல்வாமாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ் தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலால், இந்த அமைப்பு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

(மும்பை தாக்குதல்)

இந்நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியுள்ள, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையான ஜமாத் உத் தாவாவின் தலைவன், ஹபீஸ் சயிது, சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து, தன் பெயரை நீக்க வேண்டும் என்று லாகூரைச் சேர்ந்த சட்ட அமைப்பின் மூலம் ஐ.நா.வில் மனுதாக்கல் செய்திருந்தான்.

ஹபீஸ் சயித், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவன். மும்பையில், 2008 ஆம் ஆண்டு நடந்த தாக்குத லுக்கு மூளையாக செயல்பட்டவன். இந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அவனை சர்வதேச பயங்கரவாதியாக, 2008 ஆம் ஆண்டு ஐ.நா. அறிவித்தது.

இப்போது ஜமாத் உத் தாவா என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறான். இந்த அமைப்புக்கு சமீபத்தில் பாகிஸ்தான் தடை விதித்தது.

ஹபீஸ் சயித் மனு மீது விசாரணை, கடந்த புதன்கிழமை ஐ.நா.வில் நடந்தது. இதை ஐ.நாவின் குறை தீர்ப்பு அதிகாரி (Ombudsman), டேனியல் கிப்ஃபர் ஃபாசியேட்டி (Daniel Kipfer Fasciati)  விசாரித்தார். ’’ஹபீஸ் சயித் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் எந்த தண்டனையும் விதிக்கப்படாதவர். அதனால் அவர் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்’’ என்று ஹபீஸின் வழக்கறிஞர் கூறினார். ஆனால், ’மற்ற நாடுகளுக்கு பயங்கரவாத அச்சுற்றுத்தலை அவர் அளிக்க மாட்டார் என்பதற்கு போதுமான ஆதாரமாக இதை ஏற்க முடியாது’ என்று கூறி, அவரது கோரிக்கையை அதிகாரி டேனியல் நிராகரித்தார்.  

இந்த மனு மீதான விசாரணையின்போது, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகள், அவனது பெயரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com