
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 900 பேர் இஸ்ரேலிலும், சுமார் 700 பேர் காஸாவிலும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்து மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு தற்போதுதான் பதிலடித் தரத் தொடங்கியிருப்பதாகக் கூறியுள்ளார் இஸ்ரேல் பிரதமர்.
ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் இஸ்ரேலுக்குள் இன்னும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே காஸா மீது முன்னறிவிப்பின்றி இஸ்ரேல் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பிணைக்கைதிகளை ஒவ்வொருவராகக் கொல்லப்போவதாக ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் படைப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இதனிடையே தாக்குதலில் 11 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இஸ்ரேலுக்கு துணையாக நிற்கும் அதே வேளையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
தாக்குதல் காரணமாக பாலஸ்தீன மக்களுக்கான உதவி நிறுத்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என ஐரோப்பிய கமிஷன் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனிய மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை உடனடியாக சர்வதேச சமூகம் தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலர் அண்டோனியோ குட்டேரஸிடம் தொலைபேசி வாயிலாக பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காஸாவை முழுவதுமாக சுற்றி வளைத்து அப்பகுதிக்கு உணவு, மருந்துப்பொருள்கள் கிடைப்பதை இஸ்ரேல் தடை செய்தால் நிலைமை மிக மோசமாகும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது. காஸாவில் முழு கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரால் வரும்
அச்சுறுத்தல்களை முறியடிக்கவும் தயாராக இருப்பதாக இஸ்ரேல்
கூறியுள்ளது.
எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல் சிசி மற்றும் துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் ஆகியோர் இருதரப்பும் உடனடியாக மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இரு தரப்பிடையே இச்சிக்கலைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இருதரப்பும் தாக்குதல்களை கைவிடுத்து உயிரிழப்பைத் தவிர்க்க முன்வர வேண்டும் என பலரும் வேண்டி வரும் நிலையில் தாக்குதல் தற்போதுதான் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் கூறி உள்ளது, அப்பகுதியில் குண்டுகள் வெடிக்கும் சத்தம் மற்றும் அபாய சங்கொலிகள் அடங்க கூடுதல் நாள்களாகும் என்ற கவலையை ஏற்படுத்துகிறது.