மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் - ஐ.நா. பொதுச்சபை

மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் - ஐ.நா. பொதுச்சபை
மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் - ஐ.நா. பொதுச்சபை

ஐ.நா. பொதுச்சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதால் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 47 உறுப்பினர்களை கொண்டது ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில். இதன் உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச்சபையின் 193 உறுப்பு நாடுகளால் மூன்றாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் ரஷ்யாவும் உறுப்பினராக இருந்தது. இந்த நிலையில், உலகின் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை அமைப்பில் இருந்து, ரஷ்யாவை நீக்க அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

உக்ரைன் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, ரஷ்ய வீரர்கள் பின்வாங்கும் போது அங்குள்ள பொதுமக்களை கண்மூடித்தனமாக கொன்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. புச்சா பகுதியில் நடைபெற்ற படுகொலை சம்பவங்களை தொடர்ந்து, மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்று அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் அழைப்பு விடுத்தார்.

மனித உரிமைகளை திட்டமிட்டு மீறும் நாடுகளின் உறுப்பினர் அந்தஸ்தை, ஐ நா பொதுச்சபையால் இடைநீக்கம் செய்யலாம் என்ற விதி உள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் ஒப்புதல் பெற, வாக்களிக்கும் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் பெரும்பான்மை தேவை. தீர்மானத்திற்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 நாடுகள் வாக்குகளும் பதிவாகின. 58 நாடுகள் வாக்களிக்காமல் தீர்மானத்தை புறக்கணித்தன. 3ல் 2 பங்கு வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக பதிவானதால் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை ஐநா பொதுச் சபை இடைநீக்கம் செய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com