முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம்

முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம்
முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம்

உக்ரைன் போர் தொடங்கிய இந்த ஒரு மாதக்காலத்தில், முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது.

நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைவதை தடுக்கும் வகையில், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. 40 நாட்களுக்கும் மேலாக உக்ரைனை சுற்றி வளைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் உக்ரைனின் சில நகரங்கள் ரஷ்யாவின் கைவசம் சென்றுவிட்டன. பல நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன.

இருந்தபோதிலும், உக்ரைனின் தலைநகரான கீவ்வை ரஷ்ய படையினரால் இதுவரை கைப்பற்ற முடியவில்லை. ரஷ்ய ராணுவத்தின் இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தின் இரண்டு ஹெலிகாப்டர்கள் ரஷ்யாவுக்குள் சென்று இன்று தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷ்யாவின் பெல்கோரட் நகரில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்நகரின் எரிபொருள் கிடங்குகளில் உக்ரைன் ஹெலிகாப்டர் குண்டு மழைகளை பொழிந்தன. இதில் 4 எரிபொருள் கிடங்குகள் முற்றிலும் சேதமடைந்ததாக பெல்கோரட் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவுக்குள் சென்று உக்ரைன் தாக்குதல் நடத்துவது இதுவே முதன்முறையாகும். உக்ரைனின் இந்த தாக்குதலால், போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகள் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்படும் என ரஷ்யா கூறியுள்ளது.

மரியுபோலில் ரஷ்யா தாக்குதல்

இதனிடையே, உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனில் தாக்குதல் நடத்தும் போது, குண்டுகளின் சத்தத்தைக் கேட்டு பொதுமக்கள் சிதறி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ரஷ்யப் படைகளின் தாக்குதலால், மரியபோல் நகரில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அலுவலகக் கட்டங்கள் முற்றிலும் சேதமடைந்தன. ரஷ்யாவின் தாக்குதலில் மரியுபோல் நகரில் இதுவரை 210 குழந்தைகள் உட்பட 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com