ஒருவேளை எதாவது ஆயிட்டா! - குண்டு சத்தத்தை மேளச் சத்தமாக்கிய உக்ரைன் ஜோடி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கி சத்தங்களுக்கு இடையே உக்ரைன் தம்பதிகள் திருமணம் செய்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் வான்வழி ராணுவத் தாக்குதல்கள் அதிகரித்துவரும் சூழலில், யாரினா அரீவா மற்றும் சீவியடூஸ்லாவ் பர்ஸின் ஆகிய இருவரும் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். திடீரென திட்டமிடப்பட்ட இந்த திருமணம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே வெளியில் துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணை தாக்குதல்களின் சத்தம் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது.
இந்த திருமணம் தொடர்பாக பேசிய அந்த தம்பதிகள், "நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. நாங்கள் எங்கள் நிலத்திற்காக போராடப் போகிறோம். ஒருவேளை நாம் இறந்துவிடுவோம், அதற்கெல்லாம் முன் நாங்கள் ஒன்றாக இருக்க விரும்பினோம். ஏவுகணை தாக்குதல்களுக்கு மத்தியில் திருமணம் செய்தது மிகவும் பயமாக இருந்தது. ஆனால் இது எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம்" என தெரிவித்தனர்
இந்த ஜோடி முதன்முதலில் அக்டோபர் 2019 இல் கீவ் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் சந்தித்தனர். இவர்கள் வரும் மே 6 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவும், ரஷ்யாவில் உள்ள வால்டாய் மலையின் டினீப்பர் நதிக்கரையில் உள்ள ஒரு உணவகத்தில் கொண்டாடவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் , நாட்டில் திடீர் போர் ஏற்பட்டதால், உடனடியாக திருமணம் செய்துகொள்ள இந்த ஜோடிகள் முடிவு செய்தனர்.
மிகவும் விமரிசையாக தங்கள் திருமண நிகழ்வை திட்டமிட்டிருந்த இவர்கள், தற்போது ஆடம்பரங்கள் எதுவும் இல்லாமல் மணவிழாவை நடத்தினார்கள்.