"நாப்கின்கூட இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம்" - உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவிகள்

"நாப்கின்கூட இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம்" - உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவிகள்
"நாப்கின்கூட இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம்" - உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவிகள்

உக்ரைன் கார்கிவ் பகுதியில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவிகள் இன்று காலை புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், உக்ரைன் நாட்டில் கார்கிவ், கீவ் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், தாங்கள் தங்கியுள்ள பகுதியில் 15 நிமிடம் முதல் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை குண்டு போடப்படுவதாகவும் அதன் சத்தத்தால் தாங்கள் பயத்துடன் பதுங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

மேலும் கார்கிவ் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் உணவு, தண்ணீர் வாங்கமுடியாமல் சிரமப்பட்டதாகவும் இன்று கடைகள் திறந்ததால் குடிநீர், உணவு, நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் வாங்கக் கடையில் வரிசையில் நின்றபோது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதால் பயத்தில் மீண்டும் விடுதிக்கே வந்துவிட்டதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.

மேலும் வீடியோ வெளியிட்டுள்ள மாணவிகள் தங்கி இருக்கும் பகுதியில் மதுரையைச் சேர்ந்த 4 பேர், கோவையை சேர்ந்த 2 பேர், சென்னையைச் சேர்ந்த 3 பேர் தங்கி இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் கார்கிவ் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் நாப்கின்கூட இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், மெட்ரோ ரயில் நிலையங்களில் தங்கியுள்ளவர்கள் கழிப்பறைக்குக் கூட செல்லமுடியாமல் மிகவும் அவதியுற்று வருவதாகவும் மாணவிகள் வேதனை தெரிவித்தனர்.

இன்று 4 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இந்தப் பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட அந்த நேரத்தில் யாரும் வெளியே வரவேண்டாம் எனக் கூறி இருந்த நிலையில்தான் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் அதிகரித்ததாகவும் கூறுகின்றனர். இதனால் அவர்கள் அச்சத்துடன் இருப்பதாகவும், தமிழக அரசும், இந்திய அரசும் விரைவாக தங்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com