ஒரே இரவில் 1,246 ட்ரோன்கள்.. ரஷ்யாவை அதிரவைத்த உக்ரைன்.. மாஸ்கோவைச் சுற்றி என்ன நடந்தது?
செய்தியாளர் - ராஜ்குமார். ர
ஒரே இரவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள்! ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி மட்டும் 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பாய்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறி வருகிறது. அப்படி ஒரே இரவில் ரஷ்யாவில் என்ன நடந்தது? உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதலின் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்...
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கிய போர் தொடர்ந்து இன்று வரை நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவின் ராணுவ நிலைகள், தொழிற்சாலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல், உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ரஷ்யாவும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை உக்ரைன் தரப்பிலிருந்து மிகப்பெரிய அளவில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரே இரவில் 1,246 உக்ரைன் ட்ரோன்களைத் தங்களது வான்பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகக் கூறியுள்ளது. குறிப்பாக, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவை நோக்கி மட்டும் 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் 123 ட்ரோன்கள் நகரின் அருகே இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் மாஸ்கோ மேயர் செர்கெய் சோபியானின் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ரஷ்யாவின் பிரையன்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிளிமோவோ கிராமத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அந்த மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேபோல், உக்ரைனிலும் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன. , உக்ரைனின் செர்னிஹிவ் மாகாணத்தில் உள்ள நிஜின் நகரில் அமைந்துள்ள தொழில் நிறுவனத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ரஷ்யா ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாகக் கூறும் 1,246 ட்ரோன்களின் எண்ணிக்கையை உக்ரைன் அதிகாரபூர்வமாக அற்றுவிக்காததால் அவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இரு நாடுகளும் வான்வழி தாக்குதலைகளை அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
