ரஷ்யா - உக்ரைன் இடையே 30 நாள் போர் நிறுத்தம்? மல்லுக்கட்டும் அமெரிக்கா.. செவி சாய்ப்பாரா புதின்?
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக, அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உக்ரேனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கத் தரப்பில் இருந்து வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கலந்துகொண்டார்.
30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத்தயார்
பேச்சுவார்த்தை முடிந்த பின் அமெரிக்கா - உக்ரைன் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை உடனடியாக ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது. இந்த போர் நிறுத்தக் காலம் இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்பந்தத்தால் நீட்டிக்கப்படலாம். இது ரஷ்ய கூட்டமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே செயல்படுத்துவதற்கும் உட்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரஷ்யா ஏற்றுக்கொண்டவுடன் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அமெரிக்கா உடனடியாக உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவியை மீண்டும் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரூபியோ, “பந்து இப்போது ரஷ்யாவின் கைகளில் இருக்கிறது. ரஷ்யர்கள் முடிந்தவரை விரைவாக இதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்பதே எங்கள் நம்பிக்கை. ரஷ்யா மற்றும் உக்ரைன் என இருநாடுகளும் கூடியவிரைவில் முழுமையான உடன்பாட்டுக்கு வருவதை அமெரிக்கா விரும்புகிறது. போர் தொடரும் ஒவ்வொரு நாளிலும் மக்கள் இறக்கிறார்கள். இந்த மோதலில் இருதரப்பிலும் மக்கள் காயமடைகிறார்கள். ரஷ்யா போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் தடையாக இருப்பது எது என்பது குறித்தும் ஆராய்வோம்” எனத் தெரிவித்தார்.
ரஷ்யா ஒப்புக்கொண்டால்....
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சவுதி அரேபியாவில் இருந்தாலும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், இருதரப்பினரின் பேச்சுவார்த்தை தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “உக்ரைன் இந்தத் திட்டத்தினை ஏற்கத் தயாராக உள்ளது. நாங்கள் இதை நேர்மறையான நடவடிக்கையாகப் பார்க்கிறோம். ரஷ்யாவையும் போர்நிறுத்தத்திற்கு சமாதானப்படுத்துவது அமெரிக்காவின் பொறுப்பாகும். ரஷ்யாவும் ஒப்புக்கொண்டால் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுதொடர்பாகப் பேசிய ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வரவேற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சில நாட்களுக்குள் போர் முடிவடையும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்தினை ஒட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா ஒப்புக்கொள்ளுமா?
தற்போது ரஷ்யா இதை எப்படி எதிர்கொள்ளும் என்பதுதான் விவாதமாக உள்ளது. ஏனெனில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்னும் போர் நிறுத்த முன்மொழிவுக்கு பதிலளிக்கவில்லை. இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள நியூயார்க் டைம்ஸ், “ஒரு மாதகால போர் நிறுத்தத்தினை ரஷ்யா ஏற்றுக்கொள்ளும் என்பதற்கான எந்த பொது அறிகுறியும் இல்லை” என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அவரும் அவரது சகாக்களும் போர்நிறுத்தத்திற்கு எதிரானவர்கள் என்ற ஒரு பேச்சு உள்ளது. ஏனெனில், ரஷ்யாவின் நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு ஒப்பந்தத்தை மட்டுமே நாடுவோம் என்று அவர்கள் பலமுறை கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன் போர் நிறுத்தம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புதின், ஒரு குறுகிய போர் நிறுத்தம் உக்ரைனுக்கான மீள் ஆயுதமாக்கக் காலமாக இருக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். நமக்கு நீண்டகால மற்றும் நீடித்த அமைதி மட்டுமே தேவை என்று புதின் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பின், உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் போலந்து போன்ற நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களைச் சந்திக்க உள்ளார். பாரிஸில் நடைபெறும் இந்த சந்திப்பில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஐரோப்பாவின் பதில் மற்றும் உக்ரைனுக்கு ஐரோப்பா தலைமையிலான பாதுகாப்பு உத்தரவாதம் குறித்தும் விவாதிக்க உள்ளார்.