தொடரும் போர் | உக்ரைன் ராணுவத் தளத்தைக் குறிவைத்த ரஷ்யா.. 450 வீரர்கள் பலி!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கியுள்ளது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் ராணுவ தளத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் மின் உற்பத்தி ஆலைகள், விமானப்படை தளங்கள், ராணுவ உள்கட்டமைப்புகள், ட்ரோன் உற்பத்தி ஆலைகள், சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் படைகள் நடத்திய 12 தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும், சுமார் 450 உக்ரைன் ராணுவ வீரர்கள் இந்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும், உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான 2 பீரங்கிகள், 3 காலாட்படை தாக்குதல் வாகனங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ரஷ்யா - உக்ரைன் எல்லைப் பகுதியில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் சண்டை நடைபெற்று வருவதாக உக்ரைன் ராணுவ தலைமை தளபதி தெரிவித்தார். அதோடு, ரஷ்ய படைகளின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வானில் இடைமறித்து தகர்த்துள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.