”ரஷ்யாவை நோக்கி போர் வருகிறது” - தலைநகர் மாஸ்கோவை குறிவைக்கும் உக்ரைன்: ட்ரோன்கள் மூலம் தாக்குதல்!

ரஷ்யா மீது உக்ரைன் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்
ரஷ்யா மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்ட்விட்டர்

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா!

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து 522 நாட்களாகப் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, இந்தப் போர் தொடங்கியதில் இருந்தே, ரஷ்யாவின் பல்வேறு கட்டடங்கள் மீது, ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.

புதின், ஜெலோன்ஸ்கி
புதின், ஜெலோன்ஸ்கிTwitter image

”போரை நிறுத்த முடியாது” - புடின்

இதற்கிடையே உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட ரஷ்யா, முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியது. ஆரம்பத்தில் உக்ரைன் பின்னடைவைச் சந்தித்த நிலையில், அதன்பின்னர் எழுச்சி பெற்று பதில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகிறது. இந்தச் சூழலில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆப்பிரிக்க தலைவர்கள் ரஷ்ய அதிபர் புடினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேசிய புடின், “ஆப்பிரிக்க முன்முயற்சி உக்ரைனில் அமைதிக்கு ஓர் அடிப்படையாக இருக்கலாம். ஆனால், உக்ரைன் தரப்பு பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கையை செயல்படுத்துகிறது. தாக்குதலுக்கு உள்ளாகும்போது எங்களால் போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாது” எனத் தெரிவித்தார். அத்துடன் தன்னுடைய படைப் பலத்தைக் காட்டும் வகையில் கப்பற்படை குறித்த வீடியோவையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

மாஸ்கோ மீது குறிவைத்த உக்ரைன்

இந்த நிலையில்தான், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஜூலை 30ஆம் தேதி, உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் சிறிய ரக ட்ரோனில் வெடிகுண்டுகள் கட்டப்பட்டு கட்டடத்தின் மீது மோத வைக்கப்பட்டுள்ளது. தடுக்கப்பட்ட ட்ரோன்கள் மாஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மைய கட்டடம் மீது மோதின. அதில் இரண்டு கட்டடங்கள் சிறிதளவு சேதமடைந்தன. இதில், ”யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தாக்குதல் முறியடிக்கப்பட்டது” என ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ராணுவத்தினர் இத்தாக்குதலை செய்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இதுபோன்ற ட்ரோன் தாக்குதல் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோவில் உள்ள வனுகோவோ விமான நிலையம் மூடப்பட்டது. இந்த மாத தொடக்கத்திலும் இதே பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றது. அப்போது மொத்தம் 5 உக்ரைன் ட்ரோன்கள் தங்களைத் தாக்கியதாக ரஷ்யா கூறியிருந்தது.

உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போர்file image

உக்ரைன் மீது குற்றச்சாட்டு

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இன்னொரு பகுதியில் காவல் நிலையம் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் ஆளுநர் இத்தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். “டுருப்செவ்ஸ்கி மாவட்டத்தில் உக்ரைன் படைகள் தாக்குதலை நேற்று இரவு மேற்கொண்டன. ட்ரோன் ஒன்று காவல் நிலையத்தைத் தாக்கியது. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்று மாகாண ஆளுநர் அலெக்சாண்டர் பொகோமாஸ் தெரிவித்துள்ளார். நேற்று மாஸ்கோ, கிரீமிய பகுதிகளைக் குறிவைத்து உக்ரைன் படைகள் தாக்க முயன்றன என்றும் அதன் ட்ரோன்களை தாக்கி வீழ்த்திவிட்டதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

”உக்ரைன் வலுப்பெற்று வருகிறது” - ஜெலன்ஸ்கி

இத்தாக்குதல்கள் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, “ரஷ்யாவின் எல்லைக்குள் போர் நுழைந்துவிட்டது. ரஷ்யாவின் அடையாளச் சின்னங்கள், ராணுவத் தளங்கள் இலக்குகளாகும். இது ஒரு தவிர்க்க முடியாத ஆனால், இயற்கையான செயல்முறை. உக்ரைன் வலுப்பெற்று வருகிறது. இருந்தாலும் ரஷ்ய தீவிரவாதிகள் நமது எரிசக்தி கட்டமைப்பை தாக்கக்கூடும். எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

புடின்
புடின்புதிய தலைமுறை

”அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும்” - டிமிட்ரி மெட்வேடேவ்

அதுபோல் உக்ரைன் விமானப் படை செய்தியாளர், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் விளைவை, அந்நாட்டு மக்கள் அனுபவிக்கிறார்கள்” தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், ”ரஷ்யா மீது எதிர்த் தாக்குதல் தொடுத்து வரும் உக்ரைன் அதில் வெற்றி பெறும் சூழல் வந்தால், அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும். நேட்டோ ஆதரவுடன் உக்ரைனின் தாக்குதல்கள் அதிகரித்தால் ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை” என்று முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வேடேவ் தெரிவித்துள்ளார். தற்போது அவர், ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போரை நிறுத்த ஜெட்டாவில் மாநாடு

இதற்கிடையே, போரை நிறுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக உச்சி மாநாடு ஒன்றை அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடத்த உக்ரைன் முடிவு செய்தது. அதன்படி இதற்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியா அரசாங்கம் செய்து வருகிறது. இந்த மாநாடு செங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவில் நடைபெற உள்ளது. இதில் உக்ரைன், பிரேசில், இந்தியா உள்பட சுமார் 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் அமெரிக்கா சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனின் உயர்மட்ட அதிகாரி ஒருவரும் கலந்து கொள்ள உள்ளார். அதேசமயம் இந்த மாநாட்டில் ரஷ்யா பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் இதற்கான தேதி உள்ளிட்ட மற்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com