கன்டெய்னரில் உயிரிழந்த 39 பேர், சீனர்கள்: குளிரில் உறைந்து உயிரிழந்தார்களா?
இங்கிலாந்தில், கன்டெய்னர் லாரியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 39 பேரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தின் எஸ்செக்ஸ் நகரில் உள்ள கிரேஸ் தொழிற்பேட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த குளிரூட்டப்பட்ட கன்டெய்னர் லாரியில், 39 மனித சடலங்கள் கிடந்தன. இதில், 8 பேர் பெண்கள். அதை மீட்ட காவல்துறையனர், லாரியை ஒட்டி வந்த 25 வயதான ராபின்சனை கைது செய்தனர். அவர் அயர்லாந்தை சேர்ந்தவர்.
உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கன்டெய்னருக்குள் உறைநிலைக்கும் 25 டிகிரி குறைவான வெப்பநிலை இருந்திருக்கலாம் என்பதால், அதில் உறைந்து 39 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதலில் பல்கேரியாவிலிருந்து இந்த லாரி வந்ததாக எஸ்செக்ஸ் காவல்துறையினர் சந்தேகித்தனர். ஆனால் அது பெல்ஜியத்திலிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றும் நடைமுறைகளை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணி கடினமானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.