பிரிட்டன் பனிப்பொழிவால் விமானங்கள் ரத்து: ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி
பிரிட்டனில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானங்கள் ரத்தாகியுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பிரிட்டனின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் லண்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. லண்டனுக்கு வர வேண்டிய விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பி அனுப்பப் பட்டிருக்கின்றன. வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 சென்டி மீட்டர் அளவுக்கு பனி படிந்திருக்கிறது. ரயில் மற்றும் சாலை போக்குவரத்தும் முடங்கியிருக்கிறது. இதனால் வெளிநாட்டுப் பயணிகள் தவித்து வருகின்றனர்.
பனிப்பொழிவால் பிரிட்டனின் வேல்ஸ், மிட்லேண்ட், வடக்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்து மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல ரயில்கள் ரத்தாகியும், பல தாமதமாகவும் வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் 140 உள்நாட்டு விமானங்களும், 26 வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரிட்டன் செல்லும் பல விமாங்கள், புறப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்பப்படுள்ளன. இதனால், ஐரோப்பிய நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட பயணிகள் காக்கவைக்கப்பட்டுள்ளனர்.