உக்ரைனுக்கு ஆதரவு: ரஷ்யா மீது நடவடிக்கையை தொடங்கிய பிரிட்டன்
ரஷ்யாவின் ஐந்து வங்கிகள் மற்றும் 3 பெரும் செல்வந்தர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லுகான்ஸ்க், டொனட்ஸ்க் பகுதிகளை சுயாட்சிப் பகுதிகளாக உறுதி செய்து அங்கு ரஷ்யா தனது படைகளை அனுப்பியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போரிஸ் ஜான்சன், ரஷ்யாவின் நடவடிக்கை உக்ரைன் மீது முழு அளவிலான போரைத் தொடுப்பதற்கான முன்னோட்டம் என விமர்சித்துள்ளார். ரஷ்யாவின் ஐந்து வங்கிகள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த பெரும் செல்வந்தர்களுக்கு பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் பிரிட்டனில் உள்ள அவர்களின் சொத்துகள் முடக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட மூன்று செல்வந்தர்களும் பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்படுவதோடு, அவர்கள் பிரிட்டனில் தொழில் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் நடவடிக்கையை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தெரசா மே வரவேற்றுள்ளார்.
இதனிடையே உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள சுயாட்சிப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள படைகள் அங்கு அமைதிப் பணியை மேற்கொள்ளும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அவரின் கூற்றை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. ரஷ்யா போர் தொடுக்கும் பட்சத்தில் உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.