சவுதியிலிருந்து எண்ணெய் பெற பிரிட்டன் தீவிரம் - ரஷ்யாவிற்கு எதிராக கூட்டணி அமைக்க முயற்சி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக, ஒரு சர்வதேச கூட்டணியை கட்டமைக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சவுதி அரேபிய தலைவர்களை சந்திக்க உள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதை எதிர்த்து, அந்நாட்டின் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 24-ம் தேதி முதல் சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் பல்வேறு வகையில் கண்டனங்கள் தெரிவித்து வந்தாலும், உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்தவில்லை. மேலும், இருநாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக, ஒரு சர்வதேச கூட்டணியை கட்டமைக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சவுதி அரேபிய தலைவர்களை சந்திக்க உள்ளார். அந்தவகையில், சவுதி செல்லும் வழியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்ற அவருக்கு, தலைநகர் அபுதாபியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அமீரக மன்னரைச் சந்தித்தப் பின்னர், போரிஸ் ஜான்சன் சவுதிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு பெறுவதை குறைத்துக்கொண்டு, சவுதி அரேபியாவிடமிருந்து அந்த வளங்களைப் பெறும் முயற்சியில் பிரிட்டன் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே போரிஸ் ஜான்சன், சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினால் மேற்குலக நாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை தடுக்க விரும்பினால், அந்நாட்டின் ஹைட்ரோ கார்பன்களை பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்று ஜான்சன் வலியுறுத்தி வருகிறார்.
முன்னதாக, சவுதி அரேபியாவில் தீவிரவாதம் தொடர்பான சம்பவங்களில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டி அந்நாட்டிற்கு போரிஸ் ஜான்சன் செல்வதற்கு பிரிட்டனில் எதிர்ப்புக் கிளம்பியது. பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல எம்பிக்கள் வலியுறுத்தினர்.