ரம்ஜானை முன்னிட்டு 500 இந்தியர்கள் சிறையில் இருந்து விடுதலை.. ஐக்கிய அரபு அறிவிப்பு!
இஸ்லாம் மதத்தினரின் புனித மாதமாக ரம்ஜான் மாதம் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில், ரம்ஜானை பண்டிகையொட்டி, கருணை அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,813 கைதிகளை விடுவிக்க அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் உத்தரவிட்டுள்ளனர். அதிபர் ஷேக் முகமது பின் சயீத் 1,295 கைதிகளை விடுவிக்கவும், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுபவர்களில் இந்தியர்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியர் ஷாஜாதி கான் தூக்கிலிடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. இதற்கிடையே, கொலைக் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட கேரளாவைச் சேர்ந்த முகமது ரினாஷ் அரங்கிலோட்டு மற்றும் முரளீதரன் பெரும்தட்டா வலப்பில் ஆகிய இரு இந்தியர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, வருடாந்திர ரமலான் மன்னிப்புகள் நாட்டின் கருணை மற்றும் இரண்டாவது வாய்ப்புகளுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. மேலும் சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.