ஹமாஸின் தாக்குதல் எச்சரிக்கை.. நெதன்யாகுவுக்கு வந்த தகவல்.. மறுத்த அரசு.. சர்ச்சையில் இஸ்ரேல்!
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. தாக்குதலுக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு, ஹமாஸ் பெரிய அளவிலான தாக்குதலுக்கு தயாராகி வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்ததாக இஸ்ரேல் நாளிதழான ஹாரெட்ஸ் (Haaretz) வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அப்போதைய தலைவர் யாஹ்யா சின்வார், மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தத் தயாராகி வருவதாக பாலஸ்தீன முன்னாள் அதிகாரி ஒருவரிடம் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் பின்னர் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு கசிந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin Zayed Al Nahyan), நெதன்யாகுவை தொடர்புகொண்டு எச்சரித்ததாக ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால், நெதன்யாகு அலுவலகம் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. அமீரக அதிபருடன் அப்போது நெதன்யாகு தொலைபேசியில் பேசவே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் இஸ்ரேலில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 7 (2023) தாக்குதலுக்கு முன் கிடைத்த எச்சரிக்கைகளை நெதன்யாகு புறக்கணித்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். முன்னாள் ராணுவ தளபதியும் நெதன்யாகுவின் அரசியல் போட்டியாளருமான காடி ஐசன்கோட் (Gadi Eisenkot), தாக்குதல் குறித்து பல எச்சரிக்கைகள் கிடைத்தும் அவை புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட்டும், (Naftali Bennett) அக்டோபர் 7 உயிரிழப்புகளுக்கு நெதன்யாகுவே நேரடி பொறுப்பு என்று கூறியுள்ளார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 2023 அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தலைமையிலான ஆயுதக்குழுக்கள் தெற்கு இஸ்ரேலில் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தின. இதில் 1,221 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 251 பேர் பணயக்கைதிகளாக காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலாக இஸ்ரேல் காஸாவில் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. காஸா, சுகாதார அமைச்சகத்தின் கணக்குப்படி, இதுவரை 73,658 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரம், நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்திய கருத்துக்கணிப்பில், எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டின் கட்சிக்கு 23 இடங்களும், நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு 20 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்கள் கிடைக்காது என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இதனால் சிறிய கட்சிகளின் ஆதரவு அடுத்த அரசை அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

